கைதான யாழ். பல்கலை மாணவர்களில் இருவர் விடுவிப்பு

jaffna-universityஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி – தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி மாணவர்கள் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு சுமார் ஒன்றரை மாதங்களாக அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் இன்று விடுவிக்கப்பட்டனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்டுள்ள இவர்களை அழைத்து வருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி வேல்நம்பி மற்றும் விடுவிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வெலிகந்தைக்குச் சென்றுள்ளனர்.

ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசினார்கள், புலிகளுக்கு சார்பான சுவரொட்டிகளை ஒட்டினார்கள் மற்றும் புலிகளுக்கு சார்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts