கைதான பல்கலை. மாணவர்கள் பொங்கலுக்கு முன் விடுதலை?; உயர்கல்வி அமைச்சர் தகவல்

jaffna_university_2009தைப்பொங்கல் தினத்தன்று யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படாவிட்டால் அதனை மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம். இதேவேளை கைதாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படக் கூடும் என நம்புகிறேன் இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்தவாரம் உயர் கல்வி அமைச்சுக்கும் பல்கலை நிர்வாகத்தினருக்கும் இடையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பி.பி.சிக்கு மேலும் தெரிவித்ததாவது:

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிடில் உயர் கல்வி அமைச்சின் பெருமளவு நிதி விரயமாக்கப்படும்.

இதனைக் கருத்தில் கொண்டு, குறித்த தினத்தில் யாழ். பல்கலைக்கழகம் செயற்படாவிட்டால் அதனை மூடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுக்கவேண்டி ஏற்படும்.

யாழ். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் எவ்வித தங்குதடங்கலுமின்றி நடைபெற்றன. சித்த மருத்துவத் துறை, நுண்கலைத்துறை போன்ற துறைகளின் கல்விப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும் கலை, வர்த்தக, முகாமைத்துவ மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்த காரணத்தினாலேயே கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகளில் முன்னேற்றம் குறித்து வாராவாரம் ஆரயப்பட்டு வருகின்றது.

இதன்போது அந்த மாணவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகத் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவரின் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள்

எனினும் அவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னராக விடுவிக்கப்படுவார்கள் என நம்புகின்றேன் என்றார்.

Related Posts