கர்நாடக இசைப் பாடகரும் சினிமா பின்னணி பாடகருமான கே.ஜே. யேசுதாஸ், பெண்கள் ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்ற வகையில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமையன்று திருவனந்தபுரத்தில் இருக்கும் சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியில் ஸ்வச் பாரத் என்ற தூய்மையான இந்தியா பிரச்சாரத்தைத் துவக்கிவைத்துப் பேசிய யேசுதாஸ், “எது மறைக்கப்பட வேண்டுமோ அது மறைக்கப்பட வேண்டும். நம்முடைய கலாச்சாரம் என்பது மறைக்கப்பட வேண்டிய அழகை உள்ளடக்கியது. ஜீன்ஸ் அணிவதன் மூலம் பிறரை அவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. ஜீன்ஸ் அணிந்தால் ஆண்கள் அதை ஊடுருவிப் பார்க்கத் தூண்டப்படுகிறார்கள்” என்று கூறினார்.
அவரது இந்தக் கருத்துக்கு இந்தியா முழுவதும் பெண்ணிய அமைப்புகள், முற்போக்காளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.
பெண்களின் உடை குறித்தும் கலாச்சாரம் குறித்தும் யேசுதாஸ் இப்படிப் பேசியிருப்பது பற்றி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த வாசுகியிடம் கேட்டபோது, “கலாச்சாரப்படிதான் உடையணிய வேண்டுமென்றால், ஆண்கள் வேஷ்டி மட்டும்தானே அணிய வேண்டும்? அப்படியானால், பெண்கள் மட்டும்தான் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பார்வை இதில் வெளிப்படுகிறது. உடை என்பது அந்தந்தப் பகுதியின் சீதோஷ்ணம், அவர்கள் பார்க்கும் வேலை ஆகியவற்றைப் பொறுத்தது” என்று தெரிவித்தார்.
பிரபல வழக்கறிஞரும் பெண்ணியவாதியுமான சுதா ராமலிங்கம், யேசுதாஸின் இந்தக் கருத்து, பெண்ணடிமைத் தனத்தின் மற்றொரு வடிவம் என்றும் வெளியிலிருந்து வரும் எந்த மாற்றத்தையும் ஏற்கக்கூடாது என்ற பார்வையே இதில் வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
யேசுதாஸின் இந்தக் கருத்துக்கு, கேரள சிபிஎம்மின் மாணவ, இளைஞர் அமைப்புகள் தங்கள் கடும் கண்டனைத்தைப் பதிவுசெய்துள்ளன. கேரள மாநில காங்கிரஸும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்திய ஊடகங்களிலும் இது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.