கேள்விக்குள்ளாகும் முஸ்லிம் தனியார் சட்ட மாற்றம்!

இலங்கையில் முஸ்லிம் அரங்கில் இன்று   பேசு பொருளாக முஸ்லிம் தனியார் சட்டம் மாறியுள்ளது. இது தொடர்பாக ஆராய அமைச்சரவையின் உப குழு நியமனமும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜீன் லம்பெர்ட் தலைமையிலான ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கையின் வெளிப்பாடும் இதன் மீதான விவாதத்தை அதிகரித்துள்ளது.முஸ்லிம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை மற்றும் அச்சட்டத்தின் கீழ் காணப்படும் வேறு காரணங்கள் தொடர்பில் காணப்படும் சட்ட விதப்புரைகள், இலங்கை அங்கம் வகிக்கும் சில சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஒழுக்கங்களுடன் ஒத்திசையாத காரணத்தினால், குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்பது இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பரிசீலனை மேற்கொண்டு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு யோசனைகளை முன்வைப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கடந்த 26 ஆம் திகதி வெளியாகிய அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை சமூகம் மீதான அடக்குமுறைகள், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் உள்ள பலவீனம் போன்ற காரங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு வழங்கியிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நீக்கிக் கொண்டது.

சிறுபான்மை சமூகங்களின் கணிசமான வாக்கு வங்கிகளை தமதாக்கி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிக்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெருவதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இந்த சலுகையை மீளப் பெறுவதற்காக ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்தவன்னமுள்ளனர்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதாக இருந்தால் இலங்கை பல நிபந்தனைகளுக்கு தலைசாய்க்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பலமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி சர்வதேச தரத்திலான சட்டமொன்றை இலங்கை அமுல்படுத்த வேண்டும், சர்­வ­தேச சம­வா­யங்­க­ளுக்­க­மைய பெண்­களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும், சட்டத்தின் ஆட்சியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. மே மாதம் 12ஆம் திகதி இச்சலுகையை வழங்குவதா? இல்லையா என ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

 தற்போது பல்வேறு இடங்களில் முஸ்லிம்களால் தமது தனியார் சட்டம் மீது மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை எதிர்க்கின்ற  போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை முஸ்லிம்களில் ஒருசாரார் மாற்றத்தை வரவேற்கின்றனர்.

இந்த வகையில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி சுருக்கமாக நோக்குவது பொருத்தப்பாடுடையதாயிருக்கும்

ஒரு நாட்டின் மத, கலாசார, பிரதேச அடிப்படைகளில் வாழ்கின்ற தனித்துவமான குழுமங்களின் தனித்துவங்களைப் பேணும் வகையில், அவர்கள் பின்பற்றுகின்ற, அவர்களுக்கே உரித்தான ன சட்டங்கள், நடைமுறைகள், வழக்காறுகள் முதலானவற்றை அவர்களுக்கு உடைத்தாக்கும் சட்டம் தனியார் சட்டம் எனப்படும்.
இலங்கையில் அமுலில் உள்ள சட்டங்களில் முஸ்லிம்களுக்கு என சில விடயங்களில் மாத்திரம் இஸ்லாமிய சட்டம் அமுலில் உள்ளது.இதனை முஸ்லிம் தனியார் சட்டம்(law of persons) என அழைப்பர்.இலங்கையில் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சிங்களவருக்குக் கூட சில விடயங்களில் கண்டிய சிங்களவருக்கு ஒரு சட்டமும் ஏனைய கரையோர சிங்களவருக்கு இன்னொரு சட்டமும் அமுலில் உள்ளது.அது மட்டுமல்ல யாழ்ப்பாணத் தமிழருக்கு தேச வழமை என ஒரு சட்டமும் ஏனைய தமிழருக்கு பொதுவான சட்டமும் இலங்கையில் அமுலில் இருக்கின்றது
பல்லின மக்களைக் கொண்ட நமது இலங்கை நாட்டில் தற்சமயம் நடைமுறையில் உள்ள தனியார் சட்டங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. கண்டியச் சட்டம்
– இது கண்டி வாழ் சிங்கள மக்களுக்கு மட்டுமான தனியார் சட்டமாகும்.
2. தேச வழமைச் சட்டம்
– இது யாழ்ப்பாணத் தமிழருக்கு மட்டும் உரித்தான சட்டம். மட்டக்களப்புத் தமிழருக்கு இது பொருந்தாது.
3. முஸ்லிம் தனியார் சட்டம்

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இஸ்லாத்தின் அனைத்துச் சட்ட திட்டங்களையும் கொண்ட  ஒரு சட்டத் தொகுப்பு அல்ல.

முஸ்லிம் தனியார் சட்டத்தின் உள்ளடக்கம்:
இது இரு பிரிவுகளக் கொண்டதாகும்.
1. ஆள்சார் சட்டம் – ( Personal Law )
* இச்சட்டத்தின் கீழ் பின்வருவன உள்ளடங்குகின்றன.
1. திருமணம், பலதார மணம்
2. விவாகரத்து
3. பராமரிப்பு
4. பிரதி பலன்களை எதிர்பார்க்காத கொடைகள்
5. பருவமடைதல்
6. தத்தெடுத்தல் அல்லது மகவேற்பு
7. பிள்ளைகளது பாதுக்காப்பு
8. திருமணம் செய்யத் தடுக்கப்பட்டோர்
9. மஹரும்  கைக் கூலியும்.

2. ஆதனம் சார் சட்டம் – ( Law of Property )
* இப்பிரிவில் பின்வரும் விடங்கள் உள்ளடங்குகின்றன.
1. உயில் எழுதாத சொத்து வாரிசுரிமை:
* உயில் எழுதாது மரணிப்பவர் சார்ந்த மத்ஹப் சட்டத்தின் பிரகாரம் வாரிசுகள் சொத்துக்களைப் பெறுவர்.
2. பிறப்பின் மூலம் வாரிசுரிமை
3. வாரிசின் வகை
4. வக்பு அல்லது நம்பிக்கைப் பொறுப்பு

# வக்புச் சட்டம்:
* இச்சட்டம் மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஸீஸின் முயற்சியின் பயனாய் 1956ல் இலங்கையில் அறிமுகமானது.

# வக்பின் வகை:
1. வறுமை நிவாரணத்துக்காகச் செய்யப்படும் வக்பு
2. பொதுவாக இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் வக்பு
3. மஸ்ஜித்களை முகாமை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் வக்பு
4. தர்ம நோக்கில் செய்யப்படும் வக்பு

இவ்வாறு முஸ்லிம் தனியார் சட்டத்தால் அங்கீகரிக்கப்படும்  / அனுமதிக்கப்படும் எதுவும் இதில் அடங்கும்.

# வக்பு சட்டத்தின் நோக்கம்:
1. மஸ்ஜித்களையும், வக்புச் சொத்துக்களையும் பதிதல்
2. நம்பிக்கைப் பொறுப்புக்கள், பராமரிப்போரின் கடமைகளை வரையறுத்தல்
3. ஜமாஅத்தினரால் தெரிவு செய்யப்படும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களை வக்ப் சபையில் பதிதல்
4. முஸ்லிம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை உருவாக்குதல்.
5. ஆணையாளரை நியமித்தலும் ஏழு உறுப்பினர்கள் கொண்ட சபையை அமைத்தலும்
6. 1982ம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின்படி மஸ்ஜித்களுக்கு மேலாக தர்ஹாக்களையும் பதிதல்
7. பதியப்பட்ட ஒவ்வொரு  நிறுவனமும்  நிதியம் அமைக்கப் பங்களிப்புச் செய்தல்

முஸ்லிம் தனியார் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தாபனங்கள்
1. காழி நீதி மன்றம்:
* நீதிச் சேவைகள் ஆணையாளரால் காழிகள் நியமிக்கப்படுவர்

* காழிகளின் அதிகாரங்கள்
1. மஹரைப் பெற்றுக் கொடுத்தல்
2. வாழ்க்கைச் செலவை அதிகரித்தல்
3. விவாகரத்தை  மேற்கொள்ள உதவுதல்
4. கைக்கூலியை மீளப் பெற உதவுதல்
5. அவசியத்தின் நிமித்தம்  வலீயாகச் செயற்படல்
6. சமரசம் செய்தல்

2. காழிகள் சபை:

    – காழிகளின் தீர்ப்பில் திருப்தி அடையாத ஒருவர், பத்து நாட்களுக்குள் இச்சபைக்கு மேன்முறையீடு செய்ய வேண்டும்.
    – இதில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பர்.
– ஒரு தீர்வு வழங்கப்படும்போது குறைந்தது மூன்று உறுப்பினர்கள்  அல்லது நீதிபதியாவது இருக்க வேண்டும்.

3. மேன்முறையீட்டு நீதிமன்றம்

4. சுப்ரீம் கோட்

    – மேன்முறையீட்டில் திருப்தி காணாதோர் இந்த நீதி மன்றத்தில் வழ்க்கைத் தாக்கல் செய்யலாம்.

5. வக்பு சபை

    – ஏழு   பேர் இதன் உறுப்பினர்களாக இருப்பர்.
– இந்த சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திருப்தி இல்லையெனில், வக்பு நியாய சபைக்கு முப்பது நாட்களுக்குள் அப்பீல் பண்ணலாம்.
– வக்பு சபையைத் தெரிவு செய்வது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவாகும்.
– நம்பிக்கைப் பொறுப்பாள்ர்களை நியமித்தல், அவர்களை நீக்குதல், இடை நிறுத்தம் செய்தல், அவர்கள் சமர்ப்பிக்கும் கணக்குகளை மேற்பார்வை செய்தல், வக்பு தொடர்பான பிரச்சினாய்களைத் தீர்த்து வைத்தல்.

முஸ்லிம் தனியார் சட்ட வரலாறு
* இதனை மூன்று தலைப்புக்ககளில் நோக்கலாம்.
1. சிங்கள மன்னர்கள் காலம்

       – இஸ்லாத்தின் தோற்றத்துக்கு முன்னரே அரபு மக்கள் நம் நாட்டோடு தொடர்பு வைத்திருந்தனர்.
– இஸ்லாத்தின் தோற்றத்தின் பின் முஸ்லிம் வர்த்தகர்களாக வந்த அரபுகளால் இலங்கையில் இஸ்லாம் அறிமுகமாகியது.
– சுதேசிகளோடு அன்னியோன்யமாகப் பழகிய அரபு முஸ்லிம்களுக்கு சிங்கள மன்னர்களின் ஆதரவும் கிடைத்தது.
– மன்னர்களின் ஆலோசகர்களாகவும் மருத்துவர்களாகவும் வெளி நாட்டு வர்த்தகத்துக்கான பொறுப்பாளர்களாகவும் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டனர்.
– சிங்கள மன்னர்களிடம் கிடைத்த இத்தகைய ஆதரவும், செல்வாக்கும் முஸ்லிம்களுக்குத் தமது தனித்துவத்தைப் பேண வழி செய்தன.
– வியாபார நோக்கிலும், ஹஜ்ஜுக்காகவும் அரேபியா சென்றுவந்த அவர்கள், அங்கு தாம் கற்றவற்றை  இலங்கையில் அறிமுகம் செய்தனர்.
– ஷரீஅத்தை அமுலாக்கம் செய்வதற்கான வழிகளையும் செய்தனர்.
– இப்படி ஷரீஅத்தை அமுலாக்கம் செய்தவர்களுள் “அப்துர்-ரஹ்மான் அபீ ஹாஷிம் ஸெய்லானி என்பவர் முக்கியமானவர்.
– இவர் இஸ்லாமிய சட்டங்களைத் தமிழில் எழுதி வெளியிட்டபோதும், அதற்கு எவரும் எத்தகைய தடைப்பாடுகளையும் விதிக்கவில்லை.

2. போர்த்துக்கீஷர், ஒல்லாந்தர் காலங்கள்

        –  போர்த்துக்கீஷரின் வருகையோடு, அதுவரை அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவி வந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
– இவர்களது அச்சுறுத்த்லுக்குப் பயந்து முஸ்லிம்கள் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.
– பின்வந்த ஒல்லாந்தரும் தம் மதத்தைப் பரப்புவதில் தீவிரம் காட்டியதால், முஸ்லிம்களின் கல்வி நிலை தேக்கமடைந்து, அதனால் அவர்கள் பல
வழிகளிலும் பிந்தங்கினர்.
– டச்சு கவர்னர் வில்லியம் பெலக் ( 1765 – 1785 ) இலங்கைக்கென ஒரு சட்ட முறையை அறிமுகப்படுத்தியதோடு, இங்கிருந்த முஸ்லிம்களுக்கெனத்
தனியான சட்டவாக்கம் ஒன்றை உருவாக்கவும் வழி செய்தார்.
– இதற்கு முஸ்லிம்கள்  ஒத்துழைப்பு வழங்கப் பயந்து பின்னின்றதால், பதேவியாவில் (இந்தோனேஷியா)  இருந்த முஸ்லிம்கள்  பின்பற்றும் சட்டத்தொகுப்பை வருவிக்கச் செய்து இலங்கையில் அறிமுகம் செய்தார், கவர்னர் பெலக்.

3. ஆங்கிலேயர்  காலம்:

        – இவர்களும் ஒல்லாந்தர் அறிமுகம் செய்த சட்டத்தையே நடைமுடைப்படுத்திய போதும், தலைப்பை மாத்திரம் “முஹம்மதியர்: அல்லது ” சோனகர் சம்பந்தமான விஷேட சட்டங்கள்” என மற்றி அமைத்தனர்.
– 1806 ல்  உயர் நீதியரசர் அலக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் கவர்னரிடம் முன்வைத்த, தனியார் சட்டம் தொடர்பான சில திருத்தங்களுடனான சட்டக் கோவை அமுலுக்கு வந்தது.
– இது ஆரம்பத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் என்றிருந்து, பின்னர் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் என ஆகியது.
– காலப்போக்கில் பிரச்சினகள் அதிகரிக்க, அதிகரிக்க இச்சட்டக் கோவை பயனற்றதென உணரப்பட்டதால், நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களின் சட்டங்களைக்கொண்டு தீர்ப்பளிக்க வேண்டிய நிர்ப்ப்பந்த நிலை ஏற்படலாயிற்று.
– இக்காலத்தில் இச்சட்டக் கோவைக்கு வெளியே சென்றும் தீர்ப்பு வழங்கலாம்  என அப்போதைய காலி மாவட்ட வழக்கறிஞர் “கில்மன்”  ஒரு தீர்ப்பு வழங்கியதால் இது தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்தன.
– இந்நிலையில் தனியார் சட்டத்தை அமுல் நடாத்த முஸ்லிம்களுக்கும் பூரண அதிகாரம் வழங்கும் வகையிலான ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனும் பிரேரணை  ஒன்றை  என். எச். அப்துல் காதர் கொண்டு வந்தார்.
– இதனை மேற்கொள்ளவென எம். டீ. அக்பர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு 1928 ல் இரு முக்கிய சட்டத் தீர்ப்புக்களை முன்வைத்தது.

1. திருமணம், விவாகரத்துத்  தொடர்பான சட்டம்
2. இவ்விரண்டும் பதியப்படவேண்டும் எனும் சட்டம்
– இக்காலத்தில் முன்னைய  ‘முஹமதியர் சட்டம்’ என்பதில் இருந்த முஹமதியர் எனும் பதம் நீக்கப்பட்டு இஸ்லாமிய சட்டம் என அறிமுகமாகியது.
– 1939ல் இச்சட்டமும் மாற்றப்படவேண்டும் என்பதற்கிணங்க, பதிவாளர் நாயகத்தின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு குழு, 1951ல் 13ம் இலக்க புதிய சட்டத் திருத்தம்  ஒன்றை அறிமுகம் செய்தது.
– இக்குழுவில்  M .T. அக்பர், T.B. ஜாயா, சம்சுதீன் போன்றோர் அங்கதுவம் வகித்தனர்.
– 1954ல் நடைமுறைக்கு வந்த இச்சட்டமே இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.

Related Posts