Ad Widget

‘கேலி செய்தவர்களுக்கு ஒன்று திரண்ட மக்களே பதில் ஆகினர்’

தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணிக்கு குறைந்தது 500 பேராவது வருவார்களா? என்ற பலரது கேள்விக்கு ஒன்று திரண்ட மக்களே இன்று பதிலாவார்கள். இது ஒரு மாபெரும் பேரணி. மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒருங்கிணைத்த பேரணி என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

suresh

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (24) யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி நிறைவுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவைக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா? ஏன் இப்போது இந்தப் பேரணி தேவைதானா? இப்பேரணிக்கு 500 பேர் வருவார்களா? மக்கள் இதனை ஏற்பார்களா? வெற்றிபெறுமா என அனைவரது கேள்விக்கும் இன்று ஒன்று கூடி தமது உரிமைகளை வென்றெடுக்க அலைகடல் என திண்ட மக்களே பதிலாவார்கள்.

இது மக்களின் போராட்டம் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக ஒன்று திரண்ட பேரணி. இதனை யாராலும் குறை கூறவும் முடியாது. இழிவுபடுத்தவும் இயலாது. இந்தப் பேரணியினை புறந்தள்ளி குழப்புவதற்கு மக்கள் பிரிதிநிதிகள், தலைவர்கள் மட்டுமன்றி ஒரு சில ஊடகங்களும் மும்முரமாக செயற்பட்டனர்.

அதற்கு எல்லாம் இன்று இடம்பெற்ற பேரணியின் வெற்றி பதிலாகும். இந்த பேரணி மூலம் மக்கள் கூறும் செய்தி நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குச் சென்றடைதற்கு மேலாக குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சென்றடைய வேண்டும்.

மக்கள் இனியும் ஏமாறத்தயார் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரசை நம்பி இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை இந்த அரசாங்கமும் என்னை ஏமாற்றிவிட்டது எனக் கூறப்போகிறார். ஏனென்றால் தந்தை செல்வா, பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டோரே. ஆகவே, மக்கள் இனியும் எமாறத்தயார் இல்லை. மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள தாமே முன்வந்துவிட்டனர் என்பதற்கான ஆரம்பமாக இந்தப் பேரணி அமைந்துள்ளது என்றார்.

Related Posts