படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தென்னிலங்கை சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 11ஆவது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இம்மக்களை தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தேசிய மீனவர் இயக்கம், பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் மக்கள் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது தாம் நேரில் வந்து பார்க்கும்போதே தமக்கு இம்மக்களின் நிலமை புரிகின்றது எனவும், ஆனால் தெற்கில் இந்த மக்களின் பிரச்சனை தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன், தாம் இம்மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைக்கும்வரை கேப்பாப்பலவு மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் வாக்குறுதியளித்தனர்.
இரவு பகல் பாராது சிறுவர்கள் முதியவர்கள் வரை இங்கு தமது உரிமைகளுக்காக போராடி வருகின்ற நிலையில், மாணவர்கள் வீதி ஓரங்களில் இருந்தபடி தமது கற்றல் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
நேற்றையதினம் சிறீலங்காப் பிரதமருடனான சந்திப்புக்கு கேப்பாப்புலவு மக்களும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இச்சந்திப்பை நிராகரித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.