கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் வசமிருந்த காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றயதினம் மக்கள் முன்னிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாப்புலவுவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி துஷ்யந்த ராஜகுரு மற்றும் மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சி குணபாலன் மற்றும் படைத்தளபதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு மக்களின் காணிகளின் உரிமையினை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனனிடம் கையளிக்க, அவர் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தார்.
இதன்போது கேப்பாப்புலவு பகுதியில் 68 குடும்பங்களுக்கு சொந்தமான 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் 17குடும்பங்களுக்கு சொந்தமான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 85 குடும்பங்களுக்கு சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரியவகையில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் எதிர்வரும் முதலாம் திகதி வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டு பிரதான பாதை மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் அத்தோடு மக்களும் தங்களுடைய காணிகளுக்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் 64 ஆவது படையணியின் முதலாவது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் நிஷாந்த மானகே வரவேற்புரையினை நிகழ்த்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர்.
காணிகளை பெறுவதற்காக சென்ற மக்கள் இதுவரை போராட்டத்தை தலைமையேற்று நடாத்திய ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளையை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு மிகுதியாகவுள்ள மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தமது காணிகளை கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் இன்றுடன் 303 நாட்களாக போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.