கேப்பாப்புலவில் 189 ஏக்கர் தனியார் காணி 6 வாரங்களில் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார்.

அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர குணதிலக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை குறித்த கலந்துரையாடல், கொழும்பில் நேற்று (24) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு, காணி விவகாரம் தொடர்பில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலளார் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோர்களது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதில், முப்படைத் தளபதிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில், முள்ளிக்குளம் விவகாரம், ஒரு விசேட அம்சமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் படையினருக்கும் இடையில் இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தவொரு கலந்துரையாடலிலும் இவ்விடயம் கலந்துரையாடப்படாமையே அதற்குரிய காரணமாகும்.

இந்த விவகாரம் சம்பந்தமாக ஆராய்ந்து இம்மாத இறுதியில் முள்ளிக்குளம் மக்களுக்கும் ஆயருக்கும் மத்தியில் கூட்டமொன்றை ஒழுங்குசெய்வதாக கடற்படைத் தளபதி அமைச்சர் சுவாமிநாதனிடம் தெரிவித்தார்.

அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின்கீழ் விடுவிக்க கடற்படைத்தளபதி இணக்கம் தெரிவித்தார்.

கேப்பாப்புலவிலிருந்து 189 ஏக்கர் விஸ்தீரணமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்த பின்னர் 06 வாரங்களில் விடுவிக்க, இராணுவத் தளபதி வாக்குறுதி அளித்தார். இதற்கான நிதி ஒதுக்கீடுகளை விரைவில் ஏற்பாடுசெய்யும் பொறுப்பை அமைச்சர் சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார்.

இதேவேளை, தொண்டமானாறிலிருந்து பருத்தித்துறை வரையான பாதையை விரைவில் மீண்டும் திறந்துவிட இராணுவத் தளபதி வாக்குறுதியளித்தார்.

பண்ணைகளில் தங்கிவாழ்வோருக்கு சம்பளம் வழங்குவதற்கான ஒரு திட்டம் காணப்படுமாயின், 11,000 ஏக்கர் விஸ்தீரணமான பண்ணைக் காணிகளை மாகாண சபைகளுக்கு விடுவிக்க பாதுகாப்புச் செயலாளர் இணக்கம் தெரிவித்தார்.

இதேவேளை, சிவில் பாதுகாப்புப் படையணியின் கீழ் இப்பண்ணைகள் தற்போது இயங்குவதுடன், பாதுகாப்பு அமைச்சினால் சம்பளம் வழங்கப்படுகிறது.

சில விடயங்கள் குறித்து பின்னர் இராணுவ உயரதிகாரிகளுடனும் அவர்களின் கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாட சகல நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

மைலடிச் சந்திக்கு அருகாமையில் இருக்கின்ற சில தனியார் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அவசியமான விடயங்கள் குறித்து ஆராயப்படும் என இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்தார்.

இன்றுவரை 70,000 ஏக்கருக்கும் கூடுதலான அளவு காணிகளை விடுவித்தமைக்காக படையினருக்கு அமைச்சர் சுவாமிநாதன் இதன்போது, நன்றி தெரிவித்தார் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts