தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவமும் பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு மேலாக விமானப் படையினரின் விமானமொன்று திடீரென வட்டமிட்டுச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
அத்தோடு, ராணுவத்தின் கூட்டுச் சதியில் போராட்டக்காரர்களை தாக்கும் முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அது மக்களால் முறியடிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தமது போராட்டத்தை சிதறடிக்கும் நோக்கில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கும் மக்கள், தமது உயிர் பிரிந்தாலும் காணிக்குள் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் மண் மீட்பு போராட்டம், இன்று 17ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.