கேப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை!

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 14ஆவது நாளை எட்டியுள்ளது.

மக்களது காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ முகாமை அகற்றி தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இம் மக்கள் ஆரம்பித்த போராட்டம், இரவு பகலாக பனியிலும் வெயிலிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதும் அரசாங்கத்திடமிருந்து இம்மக்களுக்கு எவ்வித தீர்க்கமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், தடைகளை உடைத்தெறிந்து படைமுகாமிற்குள் செல்லும் நாள் தொலைவில் இல்லையென தெரிவித்துள்ள மக்கள், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

மக்கள் போராட்டத்திற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்ற அதேவேளை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளும் அங்கு சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று 11ஆவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பிலுள்ள படை முகாமை அகற்றி காணிகள் விடுவிக்கப்படுமென கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார். எனினும், குறித்த வாக்குறுதி நிறைவேறும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லையென மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts