கேப்பாப்பிலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் தொடர்கிறது

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விமானப்படையினரும் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை சுவீகரித்து விமானப்படையினர் விமானப் படைத்தளத்தினை அமைத்து, அங்கு மக்கள் செல்லமுடியாதவாறு வேலியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி குறித்த காணிகள் அளவிடப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டிருந்த போதும், அங்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. வெகுநேரம் காத்திருத்தும் அதிகாரிகள் எவரும் வருகை தராததால் ஆத்திரமுற்ற மக்கள் தமது மண்ணை மீட்பதற்காய் அன்றுமுதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய சுதந்திர தினத்தை இம்மக்கள் கறுப்பு நாளாக அனுஷ்டித்ததோடு, கேப்பாப்பிலவு மக்கள் ஒன்றுதிரண்டு இம்மக்களுக்கு ஆதரவாக பேரணியொன்றையும் நடத்தியிருந்தனர்.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் விமானப்படை அதிகாரி ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இம்மக்களின் போராட்டம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாக இதன்போது அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts