படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி இம் மக்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்கள் மற்றும் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான மக்கள், கொழும்பு கோட்டையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது சிலருக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு மக்களின் நில மீட்புக்கான இப் போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில அமைப்புகளும் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.