கேப்பாப்பிலவு பிரச்சினை பற்றி அறிவிக்கப்படவில்லை! : ஜனாதிபதி செயலகம்

கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லையென தெரிவித்ததாக, கேப்பாப்பிலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய கேப்பாப்பிலவு மக்கள், அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்கவிடமே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன்போது, கேப்பாப்பிலவு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் உதவிச் செயலாளர், காணி உறுதிகளின் பிரதிகள் அடங்கிய கோவையை மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டதாக அவரை சந்தித்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்தோடு, ஜனாதிபதி தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts