பாதுகாப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக் கட்டடம் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு அங்குள்ள மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், மக்களுக்கு மாற்றுக் காணிகளும் பணமும் வழங்குவதற்கு அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் விடுவிக்கக் கோரும் காணியில் பாதுகாப்புத் தரப்பினரின் இரண்டு அடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும், அதன் சந்தைப் பெறுமதி 150 கோடி ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே பாதுகாப்புத் தரப்பினர் மாற்று யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கேப்பாப்பிலவில் கிட்டத்தட்ட 760 ஏக்கர் நிலப்பரப்பைப் பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மக்களது போராட்டத்தைத் தொடர்ந்து 279 ஏக்கர் நிலத்தை மாத்திரம் விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் சம்மதித்துள்ளனர். விடுவிக்க இணங்கிய 279 ஏக்கரில், மக்களின் குடியிருப்புக் காணியான 142.2 ஏக்கர் உள்ளடங்கவில்லை. மக்களின் வாழ்வாதார நிலங்களும் அதில் உள்ளடங்கவில்லை. இந்நிலையில், அக் காணிகளை விடுவிக்குமாறு கோரியே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.