“கேப்பாபுலவு மக்களின் ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு” சுவாமிநாதன்

தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்தனர்.

480 ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகள் கேப்பாபுலவில் விடுவிக்கப்படவேண்டி உள்ள நிலையில் நாளையத்தினம் முதல்கட்டமாக 180 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்படும் என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் தமக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விடுவிக்கபடும் வரை தாம் தொடர்ந்து போராடுவோம் எனவும் அனைத்து நிலங்களும் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக தாம் வாழும் நாளுக்காக ஏங்கி நிற்பதாகவும் தெரிவித்தனர்.

Related Posts