கேப்பாபுலவுக் காணி உரிமையாளர்களுடன் விசேட கூட்டம்!

கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச காணிப்பகுதி அதிகாரி சோ.சேந்தனும் கலந்து கொண்டார்.

இதன்போது கேப்பாபுலவில் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்கள் சிலர் மீள்குடியேற்ற அமைச்சிற்கு தங்கள் காணியினை படையினருக்கு வழங்கி நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இதன்படி கேப்பாபுலவில் 55 பேருக்குச் சொந்தமான 59.95 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்தினை எழுத்துமூலம் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 37 காணி உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் விருப்பத்தினை தெரிவித்துள்ளதுடன், இதில் இரண்டு காணி உரிமையாளர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கலந்துகொண்டவர்களில் பெருமளவானவர்கள் தங்களுக்கு காணிதான் வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும் 05 காணி உரிமையாளர்கள் தங்களுக்கு காணிக்குரிய நட்டஈடு வழங்குமாறும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கூட்டத்திற்கு வருகைதராதவர்கள் கிராம சேவகர் ஊடாக தங்கள் விருப்பத்தினை விண்ணப்பப்படிவத்தில் நிரப்பி வழங்குமாறும் உதவி பிரதேச செயலாளர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts