கேட்டது தனிநாடு. கிடைத்தது தமிழ் நாட்டில் இவர்களுக்கு தனி வீடு.அப்பாவி மக்களுக்கு கிடைத்ததோ சுடு காடு!– டக்ளஸ் தேவானந்தா

கேட்டது தனிநாடு. கிடைத்தது தமிழ் நாட்டில் இவர்களுக்கு தனி வீடு.அப்பாவி மக்களுக்கு கிடைத்ததோ சுடு காடு! என கவித்தமிழில் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தோவானந்தா கூட்டமைப்பினரை சாடினார்.அவரது முழு உரை வருமாறு

கௌரவ சபாநாயகர் அவர்களே!….

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எனக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு முதலில் நான் நன்றி கூறுகின்றேன். கடந்த காலத்தை நாம் திரும்பிப்பார்க்கும் போது இன்றைய சமகாலம் எமது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

சம காலத்தை நாம் எண்ணிப்பார்க்கும் போது எதிர்காலம் எமது மக்களுக்கு மாற்றங்களை தரும் என்ற நம்பிக்கை எனக்கு தெரிகின்றது. அந்த எதிர்கால நம்பிக்கையோடும், இடை விடாத உறுதியோடும்தான் நான் இந்த சபைக்கும் வந்திருக்கின்றேன். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சராக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் உண்மையுள்ள பிரதிநிதியாகவுமே நான் இந்த சபையில் உரையாற்ற வந்திருக்கின்றேன்.
அன்று புயலடித்த தேசத்தில் சிக்குண்டு வாழ்ந்த எமது மக்கள் இன்று ஓர் அமைதிப்பூங்காவில் நடக்க தொடங்கியிருக்கின்றார்கள்.

அன்று உயிர் வாழும் உரிமை கூட மிச்சமின்றி, அச்சம் தரும் வாழ்வுக்குள் அவலப்பட்டு வாழ்ந்த எமது மக்கள் இன்று உயிர் வாழும் உரிமைக்கு எதிரான தடைகளை கடந்து தமது உயரிய இலட்சியங்களை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை பெற்று சுதந்திர பிரண்ஐகளாக வாழ விரும்பும் எமது மக்களின் கரங்களை பற்றிய படி நாமும் எமது மக்களின் இலட்சிய கனவுகள் நோக்கி நடந்து கொண்டிருக்கின்றோம். அச்சமற்ற அமைதியான சூழல் எமக்கும் எமது மக்களுக்கும் ஆறுதல் தருகின்றது. இந்த அமைதிச்சூழலில் இருந்து கொண்டே எமது மக்களுக்கான அரசியலுரிமைகளை பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எமக்கு மேலும் வலுப்பெற்று வந்திருக்கிறது.

ஆனாலும் இந்த அமைதிச்சூழல் ஒரு சில பேருக்கு எரிச்சலை ஊட்டிக்கொண்டிருக்கிறது. அருவருப்பை உருவாக்கியிருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக நீடித்து சென்று, அப்பாவி மக்களின் அவலங்கள் மீதும், துயரங்கள் மீதும், மரணங்கள் மீதும் ஏறி மிதித்து நின்று,அதில் தங்களது சுயலாப அரசியலை நடத்தி, தமது தேர்தல் வெற்றிகளுக்காக வாக்கு திருடும் வஞ்சகர் கூட்டமே இந்த அமைதி சூழலை கண்டு சகிக்க முடியாமல் இருக்கிறனர்.

இங்கு சாவு நடந்தால் சவப்பெட்டி கடைக்காரனுக்கு சந்தோசம். அதை விடவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரட்டிப்பு சந்தோசம். அப்பாவி மக்களின் பிணங்களை வைத்தே அரசியல் நடத்திய பழக்கதோஷத்தில் இருந்து அவர்கள் ஒரு போதும் விடுபடப்போவதில்லை. ஆகவேதான் இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சாவு வந்து சேராதோ என்றும், அப்பாவி மக்களின் பிணங்கள் வீழாதோ என்றும் சாபமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இதனாலேயே, அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை இவர்கள் உசுப்பேற்றி விட்டிருந்தனர.; அந்த மாணவச்செல்வங்களை உசுப்பேற்றி விட்டவர்களின் பிள்ளைகள் எவராவது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்களா?… இல்லை. அவர்களது பிள்ளைகள் யாவரும் தமிழ் நாட்டிலும், திருச்சியிலும், புது டில்லியிலும், இலண்டனிலும், கனடாவிலும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருப்பவர்கள் எமது அப்பாவி மக்களின் பின்ளைகளே.
தமது பிள்ளைகளுக்கும், குடும்பத்தவர்களுக்கும் உலக நாடுகளில் உல்லாச வாழ்க்கை அமைத்து கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,

யாழ் பல்கலைக்கழக அப்பாவி மக்களின் பிள்ளைகளை உசுப்பேற்றி விட்டு அதில் அரசியல் இலாபம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து தமிழ் பேசும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நான் இந்த நாடாளுமன்றத்தின் ஊடாக அன்பான வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்படித்தான் இவர்கள் 1977 இல் தமிழீழ ஆணை கேட்டு தேர்தலில் வென்றார்கள். சாதாரண குடி மக்களையும், அவர்களது பிள்ளைகளையும் வீதிக்கு வருமாறு அறை கூவி அழைத்தார்கள்.

வீதிக்கு வந்த மக்களும் இளைஞர் யுவதிகளும் இரத்தம் சிந்தினார்கள். ஆனால் அறை கூவி அழைத்த இவர்களோ ஒரு துளி வியர்வை கூட சிந்தாமல் தமிழ் நாட்டிற்கு தமது குடும்பங்களோடு மட்டும் ஓடிச்சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

கேட்டது தனிநாடு. கிடைத்தது தமிழ் நாட்டில் இவர்களுக்கு தனி வீடு.அப்பாவி மக்களுக்கு கிடைத்ததோ சுடு காடு!…..

எரிந்து போன தேசத்தில் நலிந்து போன மக்களுடனேயே நான் என்றும் வாழ்ந்து கொண்டிருந்தவன். எமது மக்களை நட்டாற்றில் கைவிட்டு நான் எந்தக்காலத்திலும் எங்கும் ஓடிப்போனவன் அல்ல. எமது மக்களை அழிய விட்டு ஓடிப்போனவர்களே இன்று மீண்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!…

கறையான்கள் புற்றெடுக்க கருநாகங்கள் குடி புகுந்த பழமொழியின் கதை உங்களுக்கு தெரியும். அன்று யாழ் பல்கலைக்கழகத்தை உருவாக்க இடதுசாரிகளும், சிறீலங்கா சுதந்திர கட்சியும், தமிழ் பேசும் கல்வி மான்களும் முயன்றுகொண்டிருந்த போது வன்முறையிலும் இறங்கி அதை தடுத்து நிறுத்த எத்தனித்தவர்களே இந்த சுயலாப தமிழ் கட்சி தலைவர்கள்.

இன்று கருநாகங்கள் போல் யாழ் பல்கலைக்கழகத்தினுள் புகுந்து நஞ்சு கக்க துடிக்கின்கின்றனர் இந்த நடிப்பு சுதேகிகள். இந்த நச்சுப்பாம்புகளின் தடைகளை எதிர்த்து உருவாக்கப்பட்டதே யாழ் பல்கலைக்கழகம். ஆகவே யாழ் பல்கலைக்கழகம் குறித்தும் பேசுவதற்கு இவர்கள் எவருக்கும் அருகதை இல்லை என்பதை நான் இங்கு உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். மரணித்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த உரிமை உண்டாம்.

இதை கூறுகின்றவர்களில் ஒருவர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் என்பதுதான் இங்கு விசித்திரமான விடயம். கனடாவில் இருந்து வெளிவரும் புலம்பெயர் புலிகளின் உத்தியோக பூர்வமான பத்திரிகை உலகத்தமிழர் என்ற பத்திரிகை. அதில் அண்மையிலும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

கிழக்கில் முதல் பலியான பெண் புலி அனித்தா சித்திரா தேவி தம்பிராசா. இவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் இந்திய படை காலத்தில் உருவாக்கி வைத்திருந்த மண்டையன் குழுவால் கைது செய்யப்பட்டு சித்திரவதை தாங்க முடியாமல் சைனற் அருந்தி தற்கொலை செய்து கொண்டவர்.

இந்த செய்தி குறித்து கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும் மண்டையன் குழு தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் பதில் தருவாரா?.. தானே கொன்றொழித்து விட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கோரும் சுரேஸ் பிறேமச்சந்திரன் இன்று சாத்தான்; போல் வேதம் ஓதி வருகின்றார்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு பிறருக்கு உபதேசம் செய்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆனால் அவர்கள் தமது வீடுகளில் கூட அவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளை நடத்தியிருக்கவில்லை. தமது ஊழல் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வியாபார பத்திரிகை காரியாலயங்களிலும் கூட ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கவில்லை.

இவர்கள் ஊருக்கு ஊபதேசம் உனக்கல்லடி சீமாட்டி என்ற கணக்கில் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகின்றார்கள். வடக்கு கிழக்கில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என்று கோசமிடுகின்றார்கள். ஆனால் உண்மையாகவே படையினர் அங்கு நிலை கொண்டிருக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள் மன விருப்பம்.

படையினரோடு சாதாரண குடி மக்களையும், மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் முரண்பட வைத்து அதில் அப்பாவி மக்களுக்கு அவலங்களை உருவாக்குவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் திட்டம். உருவாக்கியிருக்கும் அமைதிச்சூழலில் யாழ் பல்கலைக்கழக சுற்றாடலில் நிலை கொண்டிருந்த படையினர் மெல்ல மெல்ல வெறியேறியிருந்ததை யாவரும் அறிவர்.

இன்று படையினர் பல்கலைக்கழக சுற்றாடலில் மீண்டும் நிலை கொள்ள வேண்டிய நிலையை யார் உருவாக்கியிருக்கிறார்கள்?…

கோடிக்குள் இருந்த படையினரை படலைக்குள் கொண்டு வந்து நிறுத்தி வைத்ததே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புரியாணி கொடுத்தால் இது வேண்டாம். தோசையும் இட்லியும்தான் வேண்டும் என்பார்கள். தோசையும் இட்லியும் கொடுத்தால். இது வேண்டாம் புரியாணிதான் வேண்டும் என்பார்கள்.

அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து ஒரு வழிமுறையை முன்வைத்தால் இப்படி வேண்டாம் அப்படித்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

அவர்களது விருப்பப்படி யோசனையை முன்வைவைத்தால் அதுவும் வேண்டாம் என்று தட்டிக்கழிப்பார்கள். ஆகவே இவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்பதில் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றார்கள்.

தீர்வு கிடைக்கவில்லை என்று உணர்ச்சி போங்க பேசி தங்களது நாடாளுமன்ற நாற்காலி கனவுகளை நிறைவேற்றுவதே இவர்களது திட்டம்.

ஆகவே இவர்களுக்காக காத்திருக்காமல் அரசியல் தீர்வு குறித்து அக்கறை கொண்டவர்களோடு மட்டும் பேசி தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம்.

பேசுவது தமிழ் தேசியம்,… தூக்குவது சிங்கக்கொடி.
கொட்டுவது போர் முரசு…. தட்டுவது அரசாங்கத்தின் பின்கதவு.
வெளியே பேசுவது வீரம்….. உள்ளே விழுவது காலில்.
இவைகள்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரட்டை வேட அரசியல் நாடகம்.
ஈ.பிடி.பி யினராகி எமக்கென்று இருப்பது ஒரே முகம். ஒரே கொள்கை.
எங்கும் எதிலும் வெளிப்படை.
நடைமுறைச்சாத்திய வழிமுறையே எங்கள் அடிப்படை.
எமது மக்களின் கனவுகள் விரைவில் நிறைவேறும்.
நாம் செல்லும் பயணம் வெல்லும்.

Related Posts