கொவிட் தடுப்பூசிகளை வழங்க இலங்கையின் அனுமதிக்காக காத்திருக்கும் இந்தியா

தமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான ஒங்குமுறை அனுமதிகளை இலங்கை உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளில் இருந்து பல கோரிக்கைகளை பெற்றுள்ளதாக இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இக் கோரிக்கையைத் தொடர்ந்து, பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று புதன்கிழமை முதல் மானிய உதவியின் கீழ் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்கப்போவதாகவும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸைப் பொறுத்தவரை, தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை அந் நாட்டு அரசாங்கங்கள் உறுதிப்படுத்தும் வரையில் இந்தியா காத்திருக்கிறது.

இந்தியாவின் இந்த தடுப்பூசி ஏற்றுமதித் திட்டமானது பல நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு எளிதில் தடுப்பூசியைப் பெற வழி வகுக்கும்.

உலக சமூகத்தின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீண்டகால நம்பகமான பங்காளியாக இருப்பது இந்தியாவுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Posts