கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று எச்சரிக்கை பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய, “நாட்டில் கொரோனா தொற்று தாக்கம் குறைவடைந்துவரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். என்றாலும் கொரோனா தொற்றுக்கான அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மக்கள் பொது இடங்களில் நடமாடும்போது பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் பெரும்பாலானவர்கள் இதனை மறந்து செயற்படுகின்றனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை வர்த்தமானிப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். எனினும் இதுவரை அது இடம்பெறவில்லை.

முகக்கவசங்களை பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களில் கைவிட்டுச்செல்கின்றனர். இது மிகவும் ஆபத்தான விடயமாகும். இவற்றை துப்புரவு செய்யும் பணியாளர்கள் எடுத்துச்செல்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் இருக்கின்றது. பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை குப்பை தொட்டிகளில் போடுவதில்லை. ஒருசிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இன்னும் சில வாரங்களில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன் எமது அண்டை நாடான இந்தியாவில் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. இந்தியாவில் இருந்து கடற்தொழிலாளர்கள் மற்றும் நாடு கடந்து வாழ்பவர்கள் படகுகள் ஊடாக எமது நாட்டுக்குள் வருகின்றனர். இதில் கொரோனா தொற்றாளர்களும் இருக்கலாம். அதனால் எமது கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

Related Posts