கெளதம் மேனன் – தனுஷ் கூட்டணியில் ‘என் மேல் பாயும் தோட்டா’

கௌதம் மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இணையும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் கடந்த வாரம் ஆரம்பமானது. அந்தக் கூட்டணியைப் பற்றி அப்போதே பலரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். தனுஷின் கால்ஷீட்டை வாங்குவதற்காகத்தான் கௌதம் மேனன் செல்வராகவனுடன் இணைந்தார் என்றும் சொன்னார்கள். அது தற்போது நிஜமாகப் போகிறது.

சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்திற்கு ”என் மேல் பாயும் தோட்டா” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தனுஷ் தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதற்கடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில்தான் நடிப்பார் என்றார்கள். ஆனால், அதற்குள் கௌதம் மேனன் இயக்கும் படத்தை முடித்து விடலாம் என அவர் முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

கௌதம் மேனன் ஏற்கெனவே சில ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டிருந்தார். அவர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். சூர்யா நடிக்க மறுத்த ‘துருவ நட்சத்திரம்” படத்தைத்தான் ஜெயம் ரவியை வைத்து இயக்க கௌதம் மேனன் திட்டமிட்டிருந்தார். இதனிடையே கௌதம் மேனன் – தனுஷ் இணையும் புதிய கூட்டணி உருவாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Related Posts