வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோள்வியெழுப்பியுள்ளார்.
வட.மாகாணசபையின் 111வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து 144 மில்லியன் ரூபாய் நிதி எடுக்கப்பட்டது. அந்த நிதியை சில வகைப்பாட்டினருக்கே வழங்கப்படவேண்டும் என மாகாணசபை நிபந்தனை விதித்திருந்தது.
அத்துடன் அவர்களுக்கு கொடுப்பதற்கு சபை அங்கீகாரம் வழங்கவேண்டும் எனவும் கூறியிருந்தது. இதற்கமையவே கூட்டுறவு திணைக்களத்திற்கும் 32 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட நிதி செலவிடப்பட்டுள்ளதா? செலவிடப்பட்டிருந்தால் மாகாணசபையின் அனுமதி பெறப்பட்டதா? செலவிடப்படவில்லை என்றால் அது தொடர்பான தகவல்களை அடுத்த அமர்வில் மாகாண கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும்.
இல்லையேல் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டை ஆதரிக்கமாட்டோம்” என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.