கூட்டுறவு அமைப்புக்களில் இளைஞர்களை உள்வாங்குங்கள்: கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசன்

வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக அதிக எண்ணிக்கையான இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுமாறு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பணித்துள்ளார்.   வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.   குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் அவர் உரையாற்றுகையில்,    கூட்டுறவு அமைப்புகளுக்கும் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்பி, வடக்கில் கூட்டுறவுத்துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே வடமாகாணக் கூட்டுறவு அமைச்சால் 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.    இதில் ஒரு திட்டமாக கூட்டுறவுச் சங்கங்களில், ஒவ்வொரு சங்கத்திலும் ஆகக் குறைந்தது 100 பேரையாவது புதிய உறுப்பினர்களாக இணைந்துக் கொள்ளவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    ய+லை 15 ஆம் திகதிக்கு முன்னர் இந்த இலக்கை எட்டுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளைக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கங்களுடன் இணைந்து மேற்கொள்ளவேண்டும். கிராமந்தோறும் இது தொடர்பான விழிப்புணர்வைக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்படுத்த வேண்டும்.    வடக்கின் கூட்டுறவுத்துறை தொடர்பாக எம்மால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கூட்டுறவு அமைப்புகளின் தலைமைப்பகுதிகளில் பெரும்பாலோனோர் ஐம்பதுக்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

 

நெறியாளர் குழுவில் 80 விழுக்காடுக்கு மேற்பட்டோர் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். வயது முதிர்ந்தவர்களின் அனுபவம் கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியம்.    அதே சமயம், கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு ஊக்கம் மிகுந்த இளைஞர்களின் பங்களிப்பும் அவசியம். அந்த வகையில் சங்கங்களுக்குப்புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும்போது கணிசமான அளவுக்கு இளைஞர்களையும் உள்ளீர்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு, நெறியாளர் குழுவிலும் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.    கூடுதலான உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதில் பங்கேற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய கௌரவம்வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சு. பசுபதிப்பிள்ளை, ச.சுகிர்தன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் ஆகியோரோடு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த இருநூறு வரையான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts