கூட்டுறவுத்துறை சமூக மேம்பாடு, பொருளாதாரத்தை முக்கிய நோக்காகக் கொண்டுள்ளது – தவராசா

கூட்டுறவு சட்டதிட்டங்களையும் அதிகாரங்களையும் எமது மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் வடக்கு மாகாண சபை முன்னெடுக்க வேண்டுமென மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

thavarasa

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (22) இடம்பெற்ற வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆதாயத்தை மட்டும் நோக்காகக் கொண்டு ஏனைய நிறுவனங்கள் செயற்படும் நிலையில், கூட்டுறவுத்துறை மட்டுமே சமூக மேம்பாட்டையும், பொருளாதாரத்தையும் முக்கிய நோக்காகக் கொண்டுள்ளது.

மாகாண சபை அதிகாரத்தின் கீழ் 31 விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டுறவும் அதில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், தமக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என்றும், இதனால் வடமாகாண சபையை சரியாகச் செயற்படுத்த முடியாமல் இருக்கிறது என்றும் இந்தியாவிலும் உள்ளுரிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உண்மைக்குப் புறம்பாகக் கூறி வருகின்றனர்.

இதனால், எமது மக்களுக்கும் எவ்விதமான பயன்களோ, நன்மைகளோ கிடைக்கப் போவதில்லை என்பதுடன், இருக்கின்ற அதிகாரங்களை எமது மக்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான செயற்திட்டங்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், கூட்டுறவுத்துறையை சரியாக நெறிப்படுத்தி, நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்பதுடன், மாகாண சபையின் சட்ட ஏற்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி, கூட்டுறவாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது, மூன்று கோரிக்கைகள் தொடர்பில் வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஏற்கனவே என்னுடன் கலந்துரையாடியுள்ளார்கள்.

அதன் பிரகாரம், மாகாண சபையின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களுக்கு அப்பால், மக்களின் நலன்சார்ந்து ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்பதுடன், அதற்காக மத்திய அரசின் அனுசரணையையும் தான் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கூட்டுறவு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 50 வீதத்தால் அதிகரித்தல், கூட்டுறவு ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக உள்வாங்குதல், கூட்டுறவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை முன்னெடுத்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தொழிற்சங்கத்தின் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண உதவித் தொழில் ஆணையாளர் திருமதி மீனலோஜினி ஜெகதீஸ்வரன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான திருமதி மதுமதி வசந்தகுமார், பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்னம் மற்றும் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான சயந்தன், அரியரத்னம் ஆகியோரும் உரையாற்றினர்.

“கூட்டுறவில் எம்வாழ்வு வளம்பெற ஒன்று கூடுவோம்” என்ற தொனிப்பொருளில் வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கூட்டுறவாளர்களும், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Related Posts