வடக்கு மாகாணத்தில் கூட்டுறவை விரிவாக்கும் வேலைத்திட்டம் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கூட்டுறவு அமைப்புகள் புதிதாக இணைத்துள்ளன.
இந்த ஆண்டுக்கான கூட்டுறவின் நாற்பது வேலைத்திட்டங்களில் புதிதாக அங்கத்தவர்களைச் சங்கங்களில் இணைக்கும் பணிகள் பெரிதும் வெற்றியளித்துள்ளன என்று வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
அநேகமான கூட்டுறவுச் சங்கங்கள் இந்த அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுள்ளனர்.
கூட்டுறவுக் கிராமிய வங்கி சிக்கனக்கடன் வழங்கும் சங்கங்கள் போன்றவற்றின் ஊடாகச் சுயதொழில் கடன் வசதிகளை அறிமுகப்படுத்தும் முன்னேற்பாடாக அதிகமான அங்கத்தவர்கள் சங்கங்களில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகமான அங்கத்தவர்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் இணைக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி ஊடாகக் கடன் திட்டங்களுக்கு அதிகமான அங்கத்தவர்கள் சங்கங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். என்றும் வாகீசன் தெரிவித்தார்.
கிராமிய வங்கிகள் ஊடாகச் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்குடன் குறைந்த வட்டியில் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாகச் சுயதொழில் மற்றும் கணவனை இழந்த பெண் தலைமைத்துக் குடும்பங்களுக்கும் கடன் திட்டங்கள் விரைவாக அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கென வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் இத்தகைய அங்கத்தவர்கள் இணைக்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.