தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினர் உட்புகுந்து நடாத்திய தாக்குதலில் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தொல்புரம் வழக்கம்பரையில் அமைந்துள்ள வேட்பாளரின் வீட்டினைச் சுற்றி நேற்று இரவு இராணுவத்தினர் சிங்களத்தில் கூச்சலிட்டபடி நின்றனர். அதனை அவதானித்தவர்கள் உடனடியாக இது குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு தெரியப்படுத்தினர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் நிலைமைகளை நேரில் அவதானித்தார். தொடர்ந்து அதிகாலை ஒரு மணியளவில் வீட்டினுள் திடீரென நுழைந்த இராணுவத்தினர் ஆதரவாளர்களையும் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த சுகாசையும் கொட்டன்களாலும் பூட்ஸ்சுக்களாலும் தாக்கினர்.
இதன் போது தான் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்தவன் என அடையாளப்படுத்தப்பட்டும் தாக்கினர். அதன்போது உங்களுக்கு தமிழீழம் வேண்டுமா? உங்களுக்கு வடமாகாணம் வேண்டுமா? ஒரு நாயும் இங்கே இனி இருக்க கூடாது என கூறியபடியே தங்களைத் தாக்கினர் என சுகாஸ் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
தாக்குதலில் சுகாஸ் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 8 பேரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டும் மண்டைகள் உடைக்கப்பட்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்த யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அர்ச்சுதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்.
தாக்குதல் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் வேட்பாளர் அனந்தி வீட்டில் இல்லாத நிலையில் தெய்வாதீனமாக தப்பிக்கொண்டார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய தினம் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த மிலேச்சைத்தனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.