கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களுக்கு தமது முயற்சிகளுக்கு ஆதரவு வேண்டி வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் எழுதிய மின்னஞ்சல் ஒன்று வெளியாகியுள்ளது அது இங்கே பிரசுரமாகிறது
கேசவன் சஜந்தன்
மீசாலை வடக்கு,
மீசாலை.
2016-02-23
அன்பான வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே!
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் குறித்து இதனால் நாம் எமக்குள் பகிர்ந்துகொள்கின்றோம்;. இதன் முக்கியத்துவம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பது எமது நம்பிக்கையாக இருக்கட்டும்.
ஈழத்தமிழ் மக்கள் முன்னெடுப்பது ஓர் இலக்கு நோக்கிய அரசியல் என்பதில் நாம்; எல்லோருமே உடன்படுகின்றோம் எமது மக்களுக்கான அரசியல்விடுதலையே அந்த இலக்கு என்பதிலும் நாங்கள் உடன்படுகின்றோம். தந்தை செல்வா காலம் தொட்டு விடுதலைக்கான அந்த முயற்சியிலே தமிழ் மக்கள் தெளிவானமுறையில் தொடர்;ச்சியாக ஈடுபாடு காட்டி வருகின்றார்கள். ஆண்டுகள் பல உருண்டோடினாலும், போராட்ட வழிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் எமக்கான இலக்கிலிருந்து நாம் இன்றுவரை விலகிவிடவில்லை. அதனை நோக்கி தொடர்ந்தும் உறுதியோடு பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்;
தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இப்போது எம்மை வழிநடாத்துவது தமிழ் மக்களுக்கான மிகப்பலமான அங்கீகாரத்தைக்கொண்ட அரசியல் இயக்கமாகிய ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ ஆகும். இது எமது பலமான அடையாளமுமாகும். இவ்விடயத்திலும் நாம் உடன்படுகின்றோம் என்று எண்ணுகின்றேன்.
இந்த அரசியல் இயக்கம் தமிழ் மக்களுக்கான விடுதலை வேண்டிய தனது பயணத்தில் மிக முக்கியமான படிநிலைகளைத் தாண்டவேண்டியதாக இருக்கின்ற இந்தத் தருணத்தில்; வெளியிலிருந்து பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற அதேவேளையில் உள்ளிருந்தும் கழுத்தறுப்புகளும், துரோகங்களும் இடம்பெறுவதையும் தாங்கள் எல்லோரும் அறிவோம்.
நாங்கள் அனைவரும் கூட்டாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்புவாய்ந்த தொண்டர்கள் என்றவகையில் தொடங்கி, அதனது அடையாளத்தோடு மக்கள் முன்னால் நின்று மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதுவரையில் உள்ளும் புறமுமாக எமது மக்களின் அரசியல் அடையாளத்தை, அந்த அரசியல் இயக்கத்தின் பயணத்தை சிதைக்கும் நடவடிக்கைகளைக் கண்டு இனிமேலும் வாழாவிருக்க முடியாது. இதுவிடயத்திலும் நாங்கள் எல்லோரும் உடன்படுகின்றோம் எனறே எண்ணுகின்றேன்.
கடந்த 2015ம் ஆண்டின்; தொடக்கம் முதலே மாண்புமிகு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களின் செயற்பாடுகள் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் நிலையில் இருந்து சிறுகச் சிறுக விலகிச் செல்வதாக அமைந்திருந்தது. கடந்த 2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் திடீரென தான் நடுநிலை வகிக்கப் போவதாக அவரகள் அறிவித்தமை இதனை மேலும் உறுதிசெய்வதாக அமைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்நடவடிக்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பளிபபதாக அமைந்திருந்தது மாத்திரமன்றி தெளிவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.. இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தை பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது, அது மாத்திரமன்றி வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றுமொரு ஆசனத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையும் ஏற்பட்டது. (தேர்தல் பெறுபேறுகளைப் பகுபாய்வு செய்து பார்த்தால் எமது ஆசனங்கள் நூறுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே நழுவவிடப்பட்டிருப்பதை அறிய முடியும்;)
தேர்தலுக்குப் பின்னரும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான உறவுகளில் சிலசங்கடமான சூழ்நிலைகளைத்தோற்றுவிக்கும் விதத்திலேயே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயற்பாடுகள் காணப்பட்டன, அது மாத்திரமன்றி தற்போது முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பாக்க யோசனைகள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை மலினப்படுத்தும் வகையிலும்; மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் வகையிலும் அவரது பல்வேறு நடவடிக்கைகளும் அமைந்திருந்தன. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை முற்றுமுழுவதுமாக புறக்கணித்து நடக்கின்ற நிலையும் அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில்தான் உறுப்பினர்களாகிய நாம் எல்லோரும் ஒன்றிணைந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோடு பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். அதிலே நாம் மிக முக்கியமான மூன்று விடயங்கள் குறித்துக் கூட்டாக வலியுறுத்தினோம்;.
• வினைத்திறனுள்ள மாகாணசபைச் செயன்முறை
• தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுதல்
• அரசியலமைப்பு விடயத்தில் வடக்கு மாகாணசபையின் பங்குபற்றுதல்
இவ்வாறு நாங்கள் கொள்கை சார்ந்து அழுத்தங்களைப் பிரயோகித்தமையை, நாம் மாண்புமிகு முதலமைசருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றினைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றோம் என்றும் அவரைப் பதவியிலிருந்து அகற்றி வீட்டுக்கு அனுப்பப்போகின்றோம் என்றும் ஒரு சிலர் திரிபுபடுத்திக் கூற முற்பட்டனர்;. இதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபை பலவீனப்படுத்த நினைக்கும் ஒரு சிலரின் தந்திரோபாயரீதியலரன பரப்புரை என்பதும் நாம் புரியாததல்ல.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணிக்கு தலைமை தாங்குமாறு அழைத்து வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ. இரா.சம்பந்தன் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுமாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீது ஏதேனும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமாயின் அதனையும் அவர்களே தீர்மானிக்கவேண்டுமே தவிர நாம் அல்ல. இந்த அடிப்படையினை நாம் எல்லோரும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றோம். எம்மால் செய்யக்கூடியதெல்லாம் முடியுமானவரை எமது முதலமைச்சர் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படச் செய்வதும், வினைத்திறன் மிக்க மாகாணசபையை தலைமைதாங்கி வழிநடாத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதுமாகும். இதனை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் வடக்கு மாகாணத்தினுடைய கௌரவ விவசாய அமைச்சர் அவர்களின்மேல் நல்லாட்சிப்பண்புகளுக்கு வெளியில் சென்று செயற்பட்டார் என்ற அடிப்படையில் 11 விடயங்களின் மீது சுமத்துதல்களைச் செய்து இதுகுறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே விசாரணை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரேரணையாக நிறைவேறியது. இப்போது அதனை விசாரிக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் முதலமைச்சரிடம் விடப்பட்டிருக்கின்றது, சாதாரணமாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படால் அது குறித்து விசாரணை நடாத்தி, அதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதைவிடுத்து இவ் விடயத்தை, வேறுவிதமாக திசை திருப்ப யாராவது முயற்சிப்பார்களேயானால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையையை ஆட்டங்காண வைக்கின்ற செயற்பாடகவே அமையும்.
மேற்படி கௌரவ விவசாய அமைச்சர் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சுமத்துதல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்தும் திசைதிருப்பி அதனை மாண்புமிகு முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கையாகக் காட்ட மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள்;, கௌரவ விவசாய அமைச்சரின் நடவடிக்கைகளின் மீது முன்மொழியப்பட்ட சுமத்துதல்களின் போது நிலவிய வடக்குமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஏகோபித்த நிலைப்பாட்டைப் பிளவுபடுத்தி மாண்புமிகு முதலமைச்சரை மையப்படுத்தியதாக எமக்குள் இரண்டு அணியினர் இருக்கின்றார்கள் என்பதுபோலக் காட்;டப்படவே அது வழிகோலும். அத்தைகைய ஒரு நிலையில் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளும்; நீர்த்துப்போய்விடும்.
அடுத்து, இப்பிரேரணையினை முன்மொழிந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் தனக்கு அமைச்சுப்பதவியொன்றினைப் பெற்றுக்கொள்ளவே இவ்விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கின்றார் என்பதாக எவ்வித அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டொன்றினை முன்வைப்பதனூடாக கௌரவ விவசாய அமைச்சரின் நடவடிக்கைகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகையில் அமைச்சுப் பதவி தொடர்பில் வன்னியைச் சேர்ந்த வடக்குமாகாணசபை உறுப்பினர்களை வவுனியா என்றும் முல்லைத்தீவு என்றும்; இரண்டு அணியாகப் பிரித்தாள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அடுத்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான சுத்தமான குடிநீர் விநியோகம் என்ற விடயத்தில் வடக்கு மாகாணத்தின் புத்திஜீவிகள் குறிப்பாக நீரியல்நிபுணர்கள், பொறியிலாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் ஆகியோரின் சுயாதீனமான கருத்துக்களை பெற்றுக்கொண்டு அதன்மூலம் மக்களுக்கு நன்மையளிக்கும் கொள்கைத் தீர்மானமொன்றினை முன்வைக்க முயலவில்லை என்ற குற்றச்சாட்டினை வேறுவிதமாகத் திரிபுபடுத்தி கிளிநொச்சி – யாழ்ப்பாண மாவட்டங்களுக்கிடையிலான முரண்நிலையாக பூதாகரப்படுத்தி இரண்டு மாவட்டத்தினதும் உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற தமிழ் மக்களின் பெரும்பானமைப் பலத்தைக் கொண்டிருக்கின்ற ஒரு அரசியல் இயக்கத்தை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும் சுயலாப அரசியல் நோக்கிலும், அதன் உறுப்பினர்களின் கருத்தொற்றுமையினை சிதைப்பதனூடாக சின்னாபின்னப்படுத்தவென ஒரு சாரார் முழுவீச்சில் செயல்படுவது புலனாகின்றது.
அன்புக்குரிய உறுப்பினர்களே!!
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதுகாக்கின்ற முயற்சி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்ற முயற்சி.
இந்த முயற்சியில் ஒத்துழைப்பவர்களையும், ஒத்துழைக்காது ஒதுங்கி நிற்பவர்களையும், முரண்பாடுகளை முடுக்கிவிடுபவர்களையும் மக்கள் சரிவர இனங்கண்டுகொள்வார்கள்.
அதற்கும் மேலாக முறைகேடுகள் தெடர்பாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றபோது அதனை தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் என்று ஒதுக்கிவிட்டோ அல்லது மௌனமாக இருந்துவிட்டோ நாளை எமது மக்களை எந்த முகத்தோடு நாம் சந்திக்கப்போகின்றோம் என்ற கேள்வியும் எங்கள்முன்னால் வைக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி
இவ்வண்ணம்
சட்டத்தரணி கேசவன் சஜந்தன்
வடக்குமாகாணசபை .உறுப்பினர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பிரதிகள் :-
1. மாண்புமிகு நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர்
2. கௌரவ.பொ.ஐங்கரநேசன் அவர்கள், விவசாய, விவசாய சேவைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்,