வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அந்த சுயேட்சைக்குழுவுக்கு நாம் ஆதரவளிக்கத்தயார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவரது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அதன் சகல செயற்பாடுகளுக்கும் நாம் ஆதரவளிப்பதற்கு தயார் என்றும் அவர் சொன்னார்.
‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்த கொள்கையிலிருந்து தற்போது வேறுபட்டுச் செயற்படுகின்றது.இந்நிலையில் வடமாகாண சபைத்தேர்தலில் தனித்து களமிறங்குவது அதன் கொள்கைக்கு புறம்பானதாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக அண்மைய காலங்களில் குரல் கொடுத்த அசாத் சாலி கைது செய்யப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அவரது கைது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமன்றி பெரும் கேள்விக்குறியாகவும் உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என்றும் அவர் சொன்னார்.