கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கில் வேட்பு மனுத்தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் இன்று காலை வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, முதன்மை வேட்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், இம்மானுவேல் ஆர்னோல்ட், சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக, முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், சுரேஸ் பிரேமசந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக, முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், செல்வராசா கஜேந்திரன், வாசுகியும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதன் தலைமையில், சங்கரப்பிள்ளை பத்மராஜா, கந்தையா தியாகலிங்கம், பரணிரூபசிங்கம் வரதராஜசிங்கம் உள்ளிட்டவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அத்துடன் சுயேட்சைக்குழுக்களும் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், வினோநோகராத லிங்கம், செ.மயூரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் ஜி. ரி. லிங்க நாதன் ஆகியோர் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோன்று வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் காலை வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது.

இதன்போது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையிலான ஏனைய வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் வேட்பாளர்கள் சகிதம் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் ஐந்து பேரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மூன்று பேரும், புளோட் சார்பில் ஒருவரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கத்தினை தலைமை வேட்பாளராக கொண்டு எட்டு உறுப்பினர்கள் மட்டக்களப்பில் போட்டியிடுகின்றனர்.

Related Posts