சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியா செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி கடும் சீற்றமடைந்து, தனது கடும் அதிருப்தியை தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்தாராம்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
கூட்டமைப்பு குழுவினரின் இந்திய விஜயம் குறித்து அரசாங்கத்துக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது குறித்து தான் ஏமாற்றம் அடைந்திருக்கிறார் என்றும் ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊடாக சம்பந்தனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம், தன்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டது என்றும், கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர் அரசாங்கத்திற்கும் அவர்களுக்குமிடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில், ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதாலேயே நான் ஆளுநரை மாற்றவில்லை. சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது என்றும் அவர் தன்னுடைய பிரதிநிதி ஊடாக கூட்டமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளார்.
எனினும் சம்பந்தர் ஜனாதிபதியின் இந்த மிரட்டலை ஏற்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“நான் தமிழ் கட்சியின் தலைவர், நாங்கள் அரசியல் தீர்வொன்றுக்காகப் பாடுபடுகிறோம். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அங்கு செல்கிறோம்” என்று அந்தப் பிரதிநிதியிடம் சம்பந்தன் நேரடியாகவே தெரிவித்திருந்தார் என்றும் இப்போது செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து கொழும்பு சீற்றமடைவதற்கு இன்னொரு காரணமும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தனது பதவியேற்பு விழாவில் சந்தித்தன் பின்னர் அரசாங்க பிரதிநிதிகள் எவரையும் சந்திக்கவில்லை.
இந்திய பிரதமரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இலங்கை பிரதிநிதி ஒருவருடனேயே இடம்பெற்றிருக்கவேண்டும் என தான் கருதுகிறார் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு அனுமதிவழங்கியுள்ளதன் மூலமாக இந்திய அரசு, இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும், அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று கொழும்பு அரசதரப்பு வட்டாரங்கள் கருதுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.