யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் கண்டன போராட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்று முற்பகல் செயிதியாளர் மாநாடொன்றை நடத்தியது.
இந்த மாநாட்டிலேயே தமிழ்தேசியக்கூட்டமைப்பு, இரண்டு கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறித்தது.
கடந்த (27.11.2012) செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியமை மற்றும் மேற்படி சம்பவங்களைக் கண்டித்து (28.11.2012) புதன்கிழமை அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் கோரமான முறையில் தாக்கியமையைக் கண்டிக்கும் முகமாகவும் மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்கள் தாக்கப்பட்டமை, காரை நகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் அவர்களது வீடு எரிக்கப்பட்டைமை ஆகியவற்றை கண்டிக்கும் முகமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்.பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்பாட்டத்தை இரண்டு கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதுவித வேறுபாடுகளுமின்றி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.