‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்கள், கருவறுப்புக்கள் மற்றும் வெட்டுக்குத்துக்கள் என்பன தாராளமாக நடக்கின்றன’ என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.அன்டனி ஜெயநாதன் பகிரங்கமாக தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே ஜெயநாதன் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கூறுகையில், ‘கூட்டமைப்பு என்று சொல்லி ஒரு கட்சியை வளர்த்து, மற்றைய அங்கத்துவக் கட்சிகளை தூக்கி எறிகின்றார்கள். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மட்டும் கூட்டமைப்பு என்று செல்கின்றர்கள்.
எனக்கும் கட்சி விசுவாசமுள்ளது. தமிழரசுக்கட்சியானது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உருவாக்கிய கட்சியல்ல. தற்போது கூட நான் 3,000 உறுப்பினர்களை கட்சிக்கு உறுப்பினர்களாக சேர்த்துக் கொடுத்துள்ளேன்’ என்றார்.