தற்போது பிரதான எதிர்க் கட்சியாக செயற்பட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் அனைத்தும் இனப்பிரச்சினை தீர்விற்கு அரசாங்கத்திற்கான அழுத்தங்களாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று சிரேஷ்ட ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக் காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தற்போதைய அரசியல் சூழல் சர்வதேச நிலைப்பாடுகள் என்பவற்றை அவதானித்து தீர்வு பற்றிய நம்பிக்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தற்போதைய சூழலை பார்க்கின்ற போது மாற்று தேர்வு தமிழர் தரப்பிடம் இல்லை என்ற நிலையில், தற்போது இருக்கின்ற சர்வதேச அழுத்தங்களை பயன்படுத்தி அரசியல் தீர்வு பெறவேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது.
அந்தவகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் சார்ந்த அணியினரின் நகர்வுகள் அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் இதனை தவறு என்று கூறவும் முடியாது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் சில விட்டுக் கொடுப்புக்கள், இணக்கமான செயற்பாடுகள் என்பவற்றை தவிர்க்க முடியாது. ஆனால், தமிழர் தரப்பின் இவ்வாறான விட்டுக்கொடுப்புக்ளை தென்னிலங்கை தேசியக் கட்சிகள் சரியான முறையில் கையாண்டு நேர்மையான தீர்வை தரும் என்றும் நம்பமுடியாது.
எனவே, கூட்டமைப்பின் நகர்வுகளை விமர்சிக்கின்ற தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக விமர்சனங்களை முன்வைக்காமல், தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான அழுத்தங்களாக தங்களுடைய விமர்சனங்களையும் நிகழ்ச்சி நிரலையும் ஒருங்கிணைப்பார்களாக இருப்பின், அது பயன்மிக்க செயற்பாடாக இருக்கும். அதுதான் தற்போது அவசியமானதும்கூட” என்று தெரிவித்துள்ளார்.