கூட்டமைப்பின் முடிவை மீறி தேர்தலை புறக்கணிக்கிறார் அனந்தி சசிதரன்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ananthi

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தியின் இந்தக் கருத்து வந்துள்ளது.

வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று தெரிவித்தார்.

வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் வட மாகாண சபை உறுப்பினரும், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவருமாகிய எழிலன் எனப்படும் சசிதரன் மனைவியுமாகிய அனந்தி சசிதரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

Related Posts