கூட்டமைப்பின் முடிவு நாளை!ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்து பேச்சு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த முடிவு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை அடுத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது இரு வேட்பாளர்கள் தொடர்பிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்குப் பாதகமான விடயங்கள் தொடர்பாக இதில் பங்கேற்றிருந்தவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே சொல்லப்படாத குறைபாடுகள் பற்றியும், தமிழ் மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எட்டப்பட்டது என்றும், எதிர்வரும் 30ஆம் திகதி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts