கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரம் பிரதிபலிப்பு – வித்தியாதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமே அக்கட்சிக்குள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரத்தை வெளிக்காட்டப் போதுமானது. – இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகள் ஒன்றிணைந்து அமைத்திருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 4 இல் சிலந்திச் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைமை வேட்பாளரான வித்தியாதரன் இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:-

தலைவர் பிரபாகரனினால் வழிநடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை ஜனநாயக அரசியலில் ஒன்றிணைக்க மறுத்து, அவர்களை உதைத்துத் தள்ளி, புறம் ஒதுக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் தங்களின் அரசியல் பிரசாரத்துக்கும், ஆதரவு திரட்டலுக்கும் தலைவர் பிரபாகரனின் நாமத்தையும் அவர் வழியில் தங்களை அர்ப்பணிக்க முன்வந்த போராளிகளின் ஈகங்களையும் பயன்படுத்த முற்படுவது அரசியல் பிற்போக்குத்தனமாகும் மக்களை முட்டாள்களாகக் கருதி ஏமாற்றும் எத்தனமாகும். திம்புக் கோட்பாடு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய மிதவாதக் கட்சிகளினாலும் போராளிகள் இயக்கங்களினாலும் ஒன்றிணைந்து முன்வைக்கப்பட்டது.

தமிழர் தரப்பால் அங்கு முன்வைக்கப்பட்ட மூன்று பிரதான அம்சங்களும் அப்போதைய ஜே.ஆர்.அரசினால் நிராகரிக்கப்பட்டன. எனினும் அந்தக் கோட்பாடுகளில் முதல் இரண்டும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமும், மூன்றாவது கோட்பாடு ஒஸ்லோ அறிக்கை மூலமும் பின்னர் சர்வதேச பங்களிப்புடன் இலங்கை அரசினால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டன.

அந்த மூன்று கோட்பாடுகளும் இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசுகளினால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்குக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டம்தான். அந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வு காணுதல் குறித்துத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசிய்க் கூட்டமைப்பு, அந்தக் கோட்பாடுகளின் சரித்திரப் பின்னணிகளையும் அதில் தொட்டுக் காட்ட முயன்றுள்ளது. அந்தக் கோட்பாடுகளை சர்வதேச பங்களிப்புடன் இலங்கை அங்கீகரிக்க வைத்ததில் விடுதலைப் புலிகளின் பிரதான பங்களிப்பை தமிழ்க் கூட்டமைப்பு மறைத்துப் பேசியிருப்பதில் வியப்பில்லை.

புலிகள் போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவதற்கே ஆப்பு அடிக்கும் அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஆனால், அந்தக் கோட்பாடுகளை எட்டுவதற்குக் காரணமாக இருந்த மற்றைய தரப்புக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ரெலோ போன்ற சகோதரக் கட்சிகளின் பங்களிப்பை முழுமையாக இருட்டடிப்புச் செய்துவிட்டு வெறுமனே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகத்துவம் பற்றி மட்டுமே அந்த விஞ்ஞாபனம் பேசி நிற்கின்றது.

அது போலவே தமிழர் விடுதலைக் கூட்டணி, அதன் வரலாற்றுப் பிறப்பாக்கத்துக்குக் காரணமாக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், அந்தக் கட்சிகள் எல்லாம் இணைந்து முன்வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானம், அதன் பெயரால் தமிழ் இளைஞர்களுக்குத் தாங்கள் வழங்கிய உசுப்பேற்றல் போன்ற எல்லாவற்றையும் மறைத்துவிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுயபுராணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் மலர்ந்திருக்கின்றது.

இந்த ஒரு தலைப்பட்ச – எதேச்சாதிகார – போக்கிலிருந்து கூட்டமைப்பு விடுபட வேண்டும். அப்போதுதான் ஒட்டு மொத்த தமிழினத்துக்கான விடிவை நோக்கி நாம் நகர முடியும்.

தலைவர் பிரபாகரனின் ஆசீர்வாதத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டமை ஒட்டுமொத்த தமிழரின் விடிவுக்காகவேயன்றி, தனித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதிகாரத் தோறணையை நிலை நிறுத்துவதற்கல்ல.

கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகள் இந்தக் கட்டத்திலேனும் இது குறித்து சிந்திக்க வேண்டும் தீர்மானம் எடுத்து செயல்பட முன்வரவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயகப்படுத்தி, எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து அதனை விடுவித்து, ஒட்டுமொத்த தமிழர்களின் நலனை மட்டும் மையப்படுத்திச் செயற்படுத்தும் ஒரு கட்டுக்கோப்பாக மாற்றும் போராட்டத்தில் தேர்தலின் பின்னராவது எங்களுடன் ஒன்றிணையுங்கள் என்று கூட்டமைப்பின் மற்றைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். – என்று தெரிவித்தார்.

Related Posts