கூட்டமைப்பின் தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை; சம்மந்தன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடு தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சிக்குள் முரண்பாடு உள்ளது, அதனை மறுப்பதற்கு இல்லை. ஆனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது. அனைத்து விடயங்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் காணப்படும், அது ஒருபெரிய விடயமல்ல ஆனால் அவை ஊடகங்களில் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்தார்.

மேலும் சுமந்திரனிற்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை நாடாளுமன்றத் தேர்தலின் போது வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை.

அவர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அந்தக் கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்கு ஒரு கடமை இருக்கின்றது. ஆனால் அவர் ஆதரிக்கவில்லை, ஆதரிக்காமல் விட்டது மாத்திரமல்ல நான் மௌனியாகப் போகின்றேன், ஊமையாகப் போகின்றேன் என தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டமை வேறொரு கட்சிக்கு ஆதரவளிப்பதாக அமைந்தமையினாலேயே இருவருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதனால் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண முதலமைச்சரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை நான் பேசித்தீர்த்துக் கொள்வோம் என கூறியிருந்தேன்.

எனினும் சுமந்திரன் அவுஸ்ரேலியாவுக்கு சென்றபோது ஊடகம் ஒன்றிற்கு அவ்வாறு ஊடகத்தில் பதிலளித்திருக்கக் கூடாது, கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய பின்னர் அவர் அதனை ஊடகத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என இரா. சம்மந்தன் தெரிவித்தார்.

மேலும் சில சமயங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, அல்லது ஆட்சியில் உள்ள வேறு நபர்களோ எங்கள் மத்தியில் சிறு சிறு விடயங்கள் தொடர்பாக வேற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ளலாம்.

இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது என தெரிவித்த அவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித்தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை அதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டார்.

அத்துடன் முதலமைச்சருக்கு ஆதரவாக ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனர். இதனால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

அவரை முதலமைச்சராக்கியது நான், அவரை முதலில் போய் கேட்டது நான், எமது கட்சி கூடி முதன் முதலாக பேசியபோது அவருக்கு கட்சிக்குள் எவரும் ஆதரவாக இருக்கவில்லை. சேனாதிராஜா மௌனம் சாதித்தார்.

அவரின் பெருந்தன்மை இறுதி நேரத்தில் அண்ணனின் கருத்தோடு நீங்கள் அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனி வழியில் போய்க் கொண்டு இருக்கின்றார்.

நான் அவரை நிறுத்த மாட்டேன். இது மக்களின் முடிவு நான் இந்த பதவியில் இருப்பது மக்களின் முடிவு ஐயா நீங்கள் போக வேண்டும் விக்னேஸ்வரனை நியமிக்கப் போகின்றோம் என்றால் உடனடியாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன் எனத் தெரிவித்தார்.

Related Posts