ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களது அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தினை வலியுறுத்தியாக கூறப்படுகின்றது.
அத்துடன், செல்வம் அடைக்கலநாதன், டலஸ் அழகப்பெருவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இறுதியில் பொது இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என கூறப்படுகின்றது.
பெரும்பாலும் வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் இறுதி நேரத்திலேயே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் போது இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படுமாக இருந்தால், கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்க கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.