கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு விவரம் நேற்று வெளியாகியது

tnaவடமாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசனப் பங்கீட்டு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கடந்த 3 தினங்களாக ஆசனப் பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வந்தது. இதில் நேற்று இறுதிமுடிவுகள் எட்டப்பட்டன.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 4 ஆசனங்களும், ரெலோவுக்கு 3 ஆசனங்களும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் இலங்கை தமிழர_க் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் புளொட்டுக்கு தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 3 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சி, ரொலோ, புளொட் என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு தலா 2 ஆசனங்களும் புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனினும் ஆசனப் பங்கீடு தொடர்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெறும் விசேட கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் இரண்டு முன்னாள் போராளிகள் களமிறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதும் இன்னமும் அந்த விடயமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Posts