இன்று(5) யாழ் இலங்கைவேந்தன் கலைக்கல்லுாரி மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பினை உடைப்பது எனது நோக்கமல்ல.என்னால் தமிழ்கூட்டமைப்பின் ஒற்றுமையினை சீர்குலைப்பதாக சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இது சில தனிப்பட்டவர்களின் கருத்தாக இருக்கலாம்.பல்லாயிரம் மக்களின் எதிர்பார்ப்பொன்றே என்னை இந்த பதவியில் வைத்துள்ளது.எனக்கு பதவிகள் பெரிதல்ல.
சம்பந்தன் அரசியலுக்குள் என்னை அழைக்க முன்னரே ஒரு நாள் வித்தியாதரன் என் கொழும்பு வீட்டுக்கு வந்தார். முதலமைச்சர் பதவிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தான் வர இருப்பதாகவும் என்னுடைய ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
“நான் என்ன அரசியல்வாதியா?” என்று கேட்டேன். “இல்லை. உங்களுக்குத் தமிழ் மக்களிடையே ஆதரவு உண்டு. நீங்கள் சொன்னால் கேட்பார்கள்” என்றார். காமராஜர் சொன்னது போல் “ஆகட்டும் பார்க்கலாம்” என்று சொல்லாமல் “சரி பார்ப்போம்” என்றேன்.
தம்பி மாவையைக் காணும் போதுந்தான் இந்த மனோநிலை என்னைப் பீடிக்கும். அப்பொழுதெல்லாம் இதற்கான பாவம் அண்ணன் சம்பந்தரையே சாரும் என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்!
எந்த மனோநிலையில் அண்ணன் சம்பந்தன் கோரிக்கையை ஏற்று அரசியலில் இறங்கினேனோ அதே மனோநிலையில் தான் இன்றும் இருக்கின்றேன்.
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந் தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் என்பதாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் ஒப்புதலின் பேரிலேயே இரட்டை நகர ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டது. அவருக்கு எமது மன மார்ந்த நன்றிகளை மேலும் ஒரு தரம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இரட்டை நகர ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 30.03.2016 இல் யாழ் மாவட்டச் செயலர் வேதநாயகனால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு அவை தொடர்பாக 05 அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்ட துடன் ஒக்டோபர் மாதத்தில் லண்டனில் நடைபெறவிருந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கூட்டங்களில், பரிசீலிப்பதற்கு, விவாதிப்பதற்கு குறிப்பிட்ட அமைச் சுக்களிடமிருந்து விபரங்கள் கோரப் பட்டிருந்தன. அவை எமக்குத் தரப்பட்டிருந்தன. அத்துடன் எனது பிரயாணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முறையாக அறிவித்து அனுமதிகளைப் பெற்று அதன் அடிப்படையிலேயே எனது பிரயாணம் அமைந்தது. ஆளுநரு க்கு ஜனாதிபதி தான் அனுமதி வழங்கியமையைத் தெரிவிக்கத் தவறவில்லை.
எமது ஐரோப்பிய பயணம் பற்றியும் முடிக்குரிய கிங்ஸ்ரென் உள்@ராட்சிச் சபையுடன் யாழ் மாவட்டம் செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பாகவும் சில விட யங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும், எனக் கருதுகின்றேன். ஐரோப்பிய முடிக்குரிய கிங்ஸ்ரென் உள்@ராட்சிச் சபையும் யாழ் மாவட்டமும் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி, கலாசார அலுவல்கள், நிர்வாக அல்லது ஆளுகை சம்பந்தமான விடயங்கள் பற்றி பரஸ்பரம் தமது அறிவுகள், அனுபவங்கள், பொருளாதார உதவிகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதே குறிக்கோளாக அமைந்தது.
எமது பயணத்தின் போது வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் காணப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக எவ்வகையான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத் திருக்கின்றார்கள், மக்கள் எவ்வாறு சுதந்திரமான நாட்டுப்பற்றுள்ள ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப் பிடித்து வருகின்றார்கள், ஏனைய மக்களுக்கு உதவுவதில் அவர்களின் பரோபகாரத்தன்மை எவ்வாறு நிலவுகின்றது என்பதை எல்லாம் எமது பயணத்தின் போது நாம் அறிந்து கொண்டோம். இங்கிருந்து பலவருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு நல்ல நிலை மைகளில் வாழ்க்கை நடத்துவதுடன் அரசியல் பிரவேசங்களிலும் கணிசமானவர்கள் ஈடுபட்டு சிறப்பாக இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது.
இந்த இலத்திரனியல் யுகத்தில் எமது வடபகுதியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தைப் பற்றியும் தெட்டத்தெளிவாக அவர்கள் அறிந்து வைத்திருப்பதையும் எமது முன்னேற்றகரமான செயற்பாடுகள் அம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த மையையும் நாம் அவதானிக்க முடிந்தது. நான் இங்கு ஒரு கூட்ட த்தில் பேசிவிட்டு வீடு வந்து சேர்வதற்கிடையில் அவர்கள் அக்கூட்டம் பற்றிய முழு விபரங்களையும் அறிந்து படங்களையும் பார்த்து வைத்திருக்கின்றார்கள். எமது ஒப் பந்தங்கள் கைச்சாத்தான பின்னர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக முன்னணி வகிக்கின்ற ஓர் நிறு வனத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே கழிக்கப்பட்ட மின், இலத்திரனியல் உபகரணங்களில் இருந்து பெறக்கூடிய பெறுமதி மிக்க பகுதிகள் எவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு விடப்படுகின்றது என்பதை செயல்முறை ரீதியாக அறிந்து கொண்டோம்.
அதேபோன்று சுகாதாரம் தொடர்பாக கிங்ஸ்ரென் பொது வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள வைத்தியர்கள், மருத்துவத்துறையினர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய போது அங்குள்ள வைத்தியர்கள் சுழற்சி முறையில் இங்கு வந்து மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் அதேநேரத்தில் தமது வைத்திய நிலையங்களில் காணப்படும் மேலதிக உபகரணங்களை எமக்கு வழங்குவதற்கும் தமது விருப்பைத் தெரிவித்திருந்தனர்.
மேலும் கிங்ஸ்ரென் வாழ் தமிழ் முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆர்வமாக உள்ளதை அறிந்து கொண்டோம்.
அத்துடன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தோம். அவர்கள் எம்மை அன்புடன் வரவேற்றது மட்டுமன்றி கல்வி தொடர்பான பல விடயங்களில் எமக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளனர்.
பரஸ்பரம் இரு நகரங்களுககும் இடையே சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டு விடயங்களை பகிர்ந்துகொள்வது என்ற அடிப் படையிலேயே எமது ஒப்பந்தங்கள் அமைந்த போதும் பொருளாதார ரீதியாக நாம் மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கின்ற காரணத்தினால் கலாசார மேம்பாடுகள் தொடர் பாக எம்மிடையே வழக்கில் இருக்கும் கலை கலாசார விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எமது விருப்பையும் ஒப்புதலையும் தெரிவித்திருந்தோம். அதை அவர்கள் வரவேற்றார்கள்.
பன்னிரண்டாயிரம் தமிழ்க் குடும்பங்கள் இவற்றைப் பார்க்க, கேட்க ஆவலாய் இருப்பதாகக் கூறினார்கள்.
அதேநேரம் பொருளாதார முதலீடுகள் கிங்ஸ்ரென் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை வெளியிட நாம் தவற வில்லை. கிங்ஸ்ரென் நகரத்தில் இரண்டாவது நிலையில் கொரிய இனமக்களே 23% சதவிகிதம் வாழ்கின்ற போதும் தமிழ் மொழிக்கு ஆங்கிலத்தின் பின்னர் இரண்டாம்தர அந்தஸ்து அங்கு வழங்கப்பட்டிருப்பது எமது மொழியின் சிறப்பையும் எம்மவர்களின் திறமைகளை எடுத்துக் காட்டுவதற் குஞ் சான்றாக அமைந்திருக்கின்றன.
எமது வெளிநாட்டுப் பயணங்களின் போது பலர் எம்மிடம் வட பகுதி அபிவிருத்திகள் தொடர்பாக வினவினர். பல உதவிகளை தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாக இணைந்தும் வழங்குவதாக தெரிவித்தனர். இவை அனைத்தும் ஓர் ஒழுங்குமுறைக்குட்படுத்தப்பட்டு திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது அவா. உதவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய அளவுகளில் மேற்கொள்வது உடனடித் தேவையை நிறைவு செய்வதாகவே அமைவன. திட்டமிட்டு மேற் கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் நீண்டகால அடிப்படையில் எமது மக்களுக்கான அடிப்படைத் தேவை களையும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஈடுகொடுப்பனவையாகவும் அமைவன.
முதலில் எங்கள் ஆதார அடிப் படைக் கட்டமைப்புக்கள் பலம் வாய்ந்தவையாக உள்ளனவா என்பது ஆராயப்பட வேண்டும். நீர், மின்சாரம், வடிகால் வசதிகள் இவற்றுள் முக்கியமானவை. எமது பகுதிகளில் நிலத்தடி நீர் வளங்களைப் பொறுத்தே அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். பெரிய குளங்களோ ஆறுகளோ எமது பகுதிகளில் இல்லை. இந்த நிலையில் பாரிய வேலைத் திட்டங்களை பேராசையின் நிமித்தம் முன்னெடுக்க முனைவது இருப்பதையும் அழிப்பதாக ஏற்பட்டுவிடும். அதனால் தான் நாம் சிறிய மத்திய தர அபிவிருத்திகளைக் கூடுதலாக நடைமுறைப்படுத்த விரும்புகின்றோம். “பாரிய ஆலைகளை ஆக்குங்கள். ஆயிரம் ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுங்கள்” என்று ஆரவாரஞ் செய்வது நடை முறைக்கு ஒத்துவராது என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நிலையில் எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்குப் புறம்பாக எமது மக்களின் எதிர்கால வாழ்வு நிலைபேறு கொண்டதாகவும் சுபீட்சமானதாகவும் அமைவதற்கு நாம் பல திட்டஙகளை புவியியல், விஞ்ஞான, பொருளாதார அறிஞர்கள் குழாம்களுடன் இணைந்து வரைய வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு உள்ளது. ஒவ்வொருவருந் தமது தனித்துவங்களையும் வித்துவத்தையும் உள்நுழைத்து நாம் முன்னெடுக்க இருக்கின்ற திட்டங்களைக் குழப்புவதற்கு பதிலாக ஒன்றிணைந்து எம்மை என்ன காரணத்திற்காக மக்கள் எமது கதிரைகளில் அமோக வெற்றியு டன் அமர வைத்தார்களோ அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறக்கூடிய வகையில் எமது எதிர்காலத் திட்டங்களைத் தயாரிக்க உதவி தர வேண்டும்.
ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதற்கும், பத்திரிகைகளில் தம்மைப் பற்றிச் செய்திகளை வெளியிடுவதற்கும் விரயம் செய்கின்ற பெறுமதியான நேரங்களை இவ்வாறான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து பெறுமதியான கருத்துக்களை வழங்குவதற்கு எமது அரசியலாளர்கள் பயன்படுத்துவது சிறப்புடையது.
அண்ணன் சம்பந்தன் அவர்கள் இங்கிருப்பதால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுதல் நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றேன். என்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்து போகக் கூடும் என்ற கருத்து பத்திரிகைகளால் மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு வருகினறது. இது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டவர்களின் அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த மனோநிலையுடன் அண்ணன் சம்பந்தனின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் இறங்கினேனோ அதே மனோநிலையில்தான் இப்பொழுதும் இருக்கின்றேன். எனக்குப் பதவிகள், அதிகாரங்கள் பெரிதன்று. அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக்கில்லை.
பல்லாயிரம் மக்களின் எதிர்பார்ப்பொன்றே என்னைத் தொடர்ந்து இந்தப் பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே த.தே.கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அது கொள்கை ரீதியானது. ஒரு அமைப் பின் கொள்கைகள் மாறலாம். அதனால் அந்த அமைப்பை அடித்துடைக்கவே அவ்வாறான மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமை. அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து. ஆகவே முரண்பாடுகள் இருப்பதால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட்டம் நிறைந்த ஜனநாயக கூட்டமைப்பாக இருந்து வருகின்றது என்பதே எனது கருத்து.
சில சமயங்களில் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும் அவற்றை மாற்றிப் பேரம் பேசத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளியிடப்படுவதுண்டு. தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அம்மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர்களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும். எந்தளவுக்கு எமது பேரம் சார்ந்த மாற்றங்கள் செல்லலாம் என்ற கேள்வி எழும் போது சுயநலத்திற்கு ஏற்றவாறு தலைவர்கள் நடந்து கொள்ள இடமிருக்கின்றது என்பதை இங்கு கூறி வைக்கின்றேன் என்று கூறிய அவர்
ஊடகங்கள் கைகொள்ளவேண்டிய சில நடைமுறைகள் பற்றியும் அவர்தனது நீண்ட உரையில் தெரிவித்தார். சில ஊடகங்களாலேயே தனது உயிருக்கு அச்சுறுத்தல் வரும் நிலை உருவானதாக குற்றம்சாட்டினார்.
அதிகாலையில் உதயனாம் சூரியன் வரும் முன்னே காலைக்கதிர் முன்னுக்கு வரும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.