கூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்களுக்கு சி.வி.கே. முக்கிய அறிவுறுத்தல்!

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என கூறி கூட்டமைப்பிடம் ஆதரவு கோருபவர்கள், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்களென பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, தமிழர்கள் விடயத்தில் ஒரு வருட காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட சி.வி.கே.சிவஞானம், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை கோருபவர்கள், தமிழர்கள் விடயத்தில் தீர்வு வழங்குவோமென தெரிவித்திருந்தனர்.

ஒருவர் ஒருவருடத்தில் தீர்வு என்கிறார். இன்னொருவர் ஆறு மாதத்திற்குள் தீர்வு என்கின்றார். எவரையும் நம்ப முடியாது.

எனவே தீர்வு வழங்குவோமென்றால், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வினை வழங்குவார்கள் என்பதை கூட்டமைப்பிடம் மாத்திரமன்றி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக அதிகார பரவலாக்கல் எவ்வாறு அமையும், கைதிகள் விடுதலை என்றால் எவ்வாறு விடுவிப்பீர்களென தெளிவாக அறிவிக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts