கூட்டணியில் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தயார்: வீ.ஆனந்தசங்கரி

முன்னாள் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். எனினும் அப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே வீ.ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள், அவர்களே தேசிய தலைவர்கள் என்று அவர்களது பெயரைக் கூறியே வளர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அவர்களுக்கு அரசியல் சந்தர்ப்பம் வழங்க மறுத்துள்ளமை தவறான விடயம்.

நேர்மையான, விசுவாசமான, தமிழர்களின் இனப்பிரச்சினை பற்றி நன்கு விளங்கியவர்களே நாடாளுமன்றம் செல்லவேண்டும். அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும்.

மேலும், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தோற்கடித்து முன்னாள் போராளிகள் நாடாளுமன்றம் செல்வதற்கு வழிவகுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் விரும்பினால், அவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Related Posts