கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நாட்டி வைத்தனர்.
நேற்றய தினம் (26) யாழ்.பழையபூங்கா வளாகத்தினுள் மும்மத சமயத் தலைவர்களின் ஆசியுடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
வடமாகாண ஆளுநரின் நிதியுதவியுடன் இம் மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன்போது உரையாற்றிய கரப்பந்தாட்ட சங்கத் தலைவர் மனோகரன் மூன்று விளையாட்டுத் துறைகளுக்கான மைதானங்களை அமைப்பதற்கு இடத்தை ஒதுக்கித்தந்து, அதற்கான நிதியுதவியையும் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திசிறி ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யுத்தகாலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறமைக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்.
யுத்தகாலத்தின் போது போக்குவரத்து வசதி இல்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடல்வழியாக வீர, வீராங்கனைகளை கொழும்பு அழைத்து அவர்களுக்கான தங்குமிடம், உணவு என பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர். அந்த வகையில் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் ஆற்றி வரும் பங்கு இன்றியமையாதது என்றும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி தனது உரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது விடா முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. யாழ்.பழைய பூங்கா வளாகம் யாரும் நெருங்க முடியாத பகுதியாக காட்சியளித்தது. ஆனால் இன்று அந்த நிலைமாற்றப்பட்டு சிறுவர்களுக்கான பொழுது போக்கு மையமாகவும், மூன்று விளையாட்டு திடல்களாகவும் மாறுகின்றமை கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
இதில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது பிள்ளைகள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டு தமது திறமைகளை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டுமென்பதே எனது எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.
வடபகுதி மாணவர்கள் கல்வியில் மட்டும் நின்றுவிடாது விளையாட்டுத்துறை உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் காணவேண்டும். மேலும் எமது மாணவர்கள் விளையாட்டுத்துறையில் மேலும் பலசாதனைகள் படைக்க வேண்டுமென்பதுடன் விளையாட்டுத்துறைக்கு தேவையான உதவிகளை தொடர்ந்தும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து மைதான நிர்மாணப் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட வேண்டுமென துறைசார்ந்தவர்களுக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் விளையாட்டுத்துறை அதிகாரி திருமதி ரூபசிங்கம், அரச நிலஅளவையாளர் திருமதி சிவேந்திரா கலாநிதி, பிரதம கணக்காளர் குகதாசன், யாழ்.மாநகர ஆணையாளர் பிரணவநாதன், முன்னாள் வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் திரு.அண்ணாத்துரை, உள்ளூராட்சி மன்றக் கணக்காளர் திரு. அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.