கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார்.
இது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை, நேற்று நள்ளிரவு முதல் உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் சீனியின் விசேட வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி ஒரு ரூபா 75 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு சீனிக்கான விசேட வர்த்தகப் பொருட்களுக்குரிய வரி 15 ரூபாவாக அதிகரிக்க ப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரியில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால், ஒரு கிலோகிராம் சீனியின் அதிகபட்ச சில்லறை விலையான 95 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்பட மாட்டாதென நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரும்புத் தொழிலையும், கரும்பு செய்கையாளர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இறக்குமதி செய்யப்படும் சீனிக்குரிய விசேட வர்த்தக சேவைப் பொருட்களுக்கான வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.