கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒன்றிணைவோம்: மக்கள் இயக்கம் அறைகூவல்

கூடங்குளம் அணு உலை பாடங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதால் அதற்கு எதிராக பேதமின்றி ஒன்றிணைவோம் என கூடங்குளத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். தினக்குரல் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் கூடங்குளம் மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,

கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு இலங்கை, இந்திய அரசாங்கங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த தவறியமைக்கான காரணம் என்ன என்று தெரியப்படுத்துமாறும் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

‘மக்களின் உரிமை ஜனநாயக புதைகுழிக்குள் தள்ளப்பட்டுவிட்டது. இலங்கை அரசியல் இராஜ தந்திரத்தின் சவால்களை மக்களுக்கு மறைத்து அரசியல் பேரம் பேசுகின்றார்கள். கூடங்குளம் தொடர்பில் இலங்கை, இந்திய அரசாங்கங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மக்களுக்கு விபரிக்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலை குறித்து ஆராயுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்கவுக்கு சர்வதேசம், அறிவுறுத்தியது. ஆனால், அவர் அது தொடர்பில் ஆராயாமல் கூடங்குளம் அணு உலையால் ஆபத்து இல்லை என கூறுகின்றார்.

இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதற்கு எதிராக இன, மத பேதம் இன்றி ஒன்றுதிரண்டு போராட வேண்டும்’ என்றனர்.

Related Posts