கூகுள் வீதிப் படங்களில் வலி.வடக்கைக் காணோம்!- இடம்பெயர்ந்த மக்கள் கவலை!

கூகுள் நிறுவனம் இலங்கையில் கூகுள் வீதிப் படங்களை வெளியிட்டுள்ள நிலையில், அதில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளைப் பார்வையிட முடியாதுள்ளது.

கூகுள் வீதிப் படங்கள் எடுப்பதற்காக கடந்த காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் கூகுள் நிறுவன கார் ஒன்று வீதிகள் அனைத்திலும் சென்றது. ஆனால், அந்தக் கார் வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லவில்லை என்பது நேற்று வெளியிடப்பட்ட கூகுள் வீதிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைத் தாண்டி வீதிப் படங்கள் கூகுளில் இல்லை. அதேபோல், எங்கெல்லாம் உயர்பாதுகாப்பு வலய எல்லைகள் தொடங்குகின்றதோ அங்கிருந்து உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குட்பட்ட இடங்களுக்கான படங்கள் இல்லை.

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள், கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த முறையின் ஊடாக கூட தமது சொந்த இடங்களைப் பார்வையிட முடியவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் வேறு சில பகுதிகளும் விடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts