கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்

கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பென்சில்வேனியாவில் உள்ள வோர்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், அண்ட்ரொய்ட் கூகுள் குரோம் கூகுள் என்ஜினியரிங் அப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர்.

2008 ஆம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையிலேயே இவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜி. சி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார் ஸ்டெனோகிராபராக இருந்தவர்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை தனது புத்திசாலித்தனத்தாலும் கடும் உழைப்பாலும் இந்த நிலையை அடைந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் சர்ச்சை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது.

ஆனால், நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும் நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார். முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால் அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார்.அடுத்த ஓராண்டில் கூகுள் குரோமை வெளியிட்டது பிச்சையின் குழு. இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்.

இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பிச்சையின் நியமனம் மூலம் உலகின் டாப் 2 நிறுவனங்களான மைக்ரோசொப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் பொறுப்பில் உள்ளனர்.

மைக்ரோசொப்ட் தலைமை செயல் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நடெல்லா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts