குழந்தைகளை கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பார்த்திபன்

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், நேற்று திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ‘எக்ஸ்னோரா’ அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மலும் வந்திருந்தார்.

இருவரும் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசினார்கள். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர். மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த நடிகர் பார்த்திபன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் என்னோடு தொலைபேசியில் பேசினார். கதறி அழுதபடி அவர் போனில் பேசினார். என்ன பிரச்சினை? ஏன் அழுதுகொண்டே பேசுகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன்.

இன்று காலையில் பத்திரிகையில் வந்த செய்தியை படித்து பார்த்தேன். பிளாட்பாரத்தில் பெற்றோருடன் தூங்கிய 2 குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகவும், அந்த குழந்தைகள் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் செய்தி வந்துள்ளது, அந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

கடத்தப்பட்ட குழந்தை ஒன்று ஆண் குழந்தை, இன்னொன்று பெண் குழந்தை என்று அவர் தெரிவித்தார்.

இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு, நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் எனது தலைமையில் இயங்கும் பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பிலும், லதா ரஜினிகாந்த் நடத்தும் தயா பவுண்டேஷன் சார்பிலும், எம்.பி.நிர்மல் அவர்களின் எக்ஸ்னோரா அமைப்பின் சார்பிலும் போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிய 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவத்தில் துரிதமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளோம். எங்கள் கோரிக்கை மனுவை படித்து பார்த்த போலீஸ் கமிஷனர் ஏற்கனவே அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கண்டிப்பாக காணாமல் போன குழந்தைகள் மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட இணை போலீஸ் கமிஷனரோடும், போனில் தொடர்பு கொண்டு பேசி துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அவரது உடனடி நடவடிக்கைகள் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

மேலும் பிளாட்பாரத்தில் தூங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் எங்களை கேட்டுக்கொண்டார். அவரது ஆலோசனை நல்ல ஆலோசனை. விரைவில் அதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை நாங்கள் மேற்கொள்வோம்.

குழந்தைகள் கடத்தப்பட்ட செய்தியை பத்திரிகைகளில் பார்த்தவுடன் நான் அதிகாலை 4 மணியளவில் குழந்தைகள் கடத்தப்பட்ட வால்டாக்ஸ் சாலை பகுதிக்கு ஆட்டோவில் சென்று பார்வையிட்டேன். வால்டாக்ஸ் சாலையில் ஏராளமான பேர் பிளாட்பாரத்தில் குழந்தைகளுடன் தூங்குவதை பார்த்தேன். இவ்வாறு பிளாட்பாரத்தில் தூங்குபவர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது அவசியமானதாகும். யாராவது ஒருவர் தூங்காமல் விழித்திருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 656 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறது. அதில் 305 குழந்தைகள் பெண் குழந்தைகளாகும். தற்போது சென்னையில் கடத்தப்பட்டுள்ள 2 குழந்தைகளும் தாயிடம் பால் குடிக்கும் குழந்தைகள் ஆகும். எங்கேயோ அந்த குழந்தைகள் கதறிய நிலையில் இருக்கும். மனிதநேயம் இல்லாதவர்கள் தான், இதுபோல் குழந்தைகளை கடத்திச் செல்வார்கள். விரைவில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் குழந்தைகள் காணாமல் போவதை தடுப்பது தொடர்பாக பல்வேறு தொண்டு நிறுவன அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு நடிகர் பார்த்திபன் கூறினார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் பார்த்திபன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அம்மா குழந்தைகள் நல காப்பகம் என்ற அமைப்பை அரசு சார்பில் தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். முதல்-அமைச்சரை சந்திப்பதற்கு அவரது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இதுதொடர்பாக சந்தித்து பேசுவேன் என்றும், ஒருவேளை தேர்தல் நேரமாக இருப்பதால் அவரை சந்திக்க முடியாவிட்டால், அவரது அலுவலகத்தில் இதுதொடர்பாக கோரிக்கை மனு கொடுப்பேன் என்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகம் தற்போது தேர்தல் நேரத்தில் பிரதான அம்சமாக பேசப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் கார்களை மடக்கி, சென்னையில் சில பெண்கள் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கிறார்கள். அந்த பெண்களின் முகச்சாயலும், அவர்கள் வைத்திருக்கும் குழந்தைகளின் முகச்சாயலும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. அந்த பெண்களை போலீசார் பிடித்து விசாரிக்க வேண்டும். அவர்களை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டார்.

Related Posts