குழந்தைகளுக்கான மிகப்பொதுவான நோய்களின் ஓர் அறிகுறி காய்ச்சலே

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் மிக முக்கியமான அறிகுறியாக காணப்படுவது காய்ச்சலாகும்.
ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது அந்தக் குழந்தைக்கு பாரதூரமான தொற்றுக்கள் உள்ளனவா என்பதை எப்போதும் பரிசோதிக்க வேண்டும்.baby-with-fever

எனவே பெற்றோர்கள் காய்ச்சல் பற்றிய அடிப்படை விடயங்களைத் தெரிந்திருப்பது அவசியமாகும் காய்ச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்களுண்டு அவற்றில் சில பின்வருமாறு –

  1. பல்வேறுபட்ட கிருமித் தொற்றுக்கள்
    உதாரணம் – வைரசு, பக்ரீறியா, ஒட்டுண்ணிகள் என்பன.
  2.  எமது உடலிலே ஏற்படும் கிருமித் தொற்றுக்கள் அல்லாத, எமது உடலின் சில இழையங்களுக்கு எதிரான தாக்கங்கள் ( Inflammarion)
    உதாரணம் – மூட்டுவாதம் போன்ற வாத நோய்கள்
  3.  அரிதாக இரத்த புற்றுநோய் (Leukaemia) போன்ற புற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
  4.  சில சமயங்களில் சில மருந்துகளும் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.
  5.  அதிகமான வெப்பம் உள்ளபோதும் உடல் வெப்பநிலை அதிகரிக்கலாம். குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைகளில்.
  6.  எமது உடலில் சில ஹோர்மோன்களின் தொழிற்பாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்படினும் காய்ச்சல் ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்டவை போன்ற அம்சங்கள் காய்ச்சல் ஏற்படக் காரணமாக உள்ளனவாயினும் மிக மிகப் பொதுவான காரணங்கள் கிருமித் தொற்றுக்களாகும். அதிலும் மிக பெரும்பாலானவை வைரசு கிருமித் தொற்றால் ஏற்படுவதாகும். சாதாரணமாக அவை பாரதூரமானவை அல்ல. எனினும் அவை டெங்கு போன்ற வைரசு கிருமித் தொற்றுக்கள் அல்ல என்பதை காய்ச்சல் ஏற்படும் போது உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதன் உஷ்ண நிலை எவ்வளவு என்பதை வெப்பமானி கொண்டு அளப்பது மிக முக்கியமானதாகும். இப்போது இலத்திரனியல் வெப்பமானிகள் உள்ளன. இவற்றைப் பாவிப்பதும் இலகுவானது. குழந்தைகளுக்கு பொதுவாக கமக்கட்டினுள் (Axilla) வைத்து வெப்ப நிலை அளவிடப்படுகிறது. அதன் படி 36.5C தொடக்கம் 37.5c வரை (98F -99.5F) வெப்பநிலை உள்ள போது அது சாதாரண உடலின் வெப்பநிலை உள்ள போது அது சாதாரண உடலின் வெப்பநிலை ஆகக் கொள்ளப்படும். வெப்பநிலை 37.5c ஐ விட ( 100.0F) கூடும் போது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம். மேலும் காய்ச்சலின் தீவரமும் குழந்தைக்கு கடுமையான வருத்தம் உள்ளதா? என்பதைத் தீர்மானிக்கும். உதாரணமாக 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 38.C (100.4F) யை விடச் கூடிய காய்ச்சல் இருப்பினும் 3 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 39C (102.2F) க்கு கூடிய காய்ச்சலிருப்பினும் அதை கடும் காய்ச்சல் எனலாம்.

sick-baby-care-photo-420x420-rdrobis-sickbaby_18

காய்ச்சலைப் போன்று கிருமித்தொற்று ஏற்பட்ட குழந்தையொன்றுக்கு வேறு பல அறிகுறிகளும் ஏற்படலாம். பெற்றோர் அவற்றையும் அவதானிப்பதன் மூலம் நோய் கடுமையாவதன் முன் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியும். அவையாவன

  1. பாலருந்தும் குழந்தை பாலருந்தாமலும், உணவு உட்கொள்ளும் குழந்தை உணவருந்தாலும் இருத்தல்.
  2.  வாந்தி எடுத்தலும் வயிற்றுப் போக்கும்.
  3.  சலம் கழிக்கும் அளவு குறைவடைதல்.
  4.  பிள்ளை சோர்வடைந்திருத்தல் ( அதிக நித்திரை)
  5.  பிள்ளையின் சாதாரண நிறத்தில் மாற்றமேற்பட்டு வெளிறிக் காணப்படல்.
  6.  கை கால்கள் குளிர்வடைதல்.
  7.  குழந்தை வேகமாகச் சுவாசித்தலும், சுவாசிப்பதில் சிரமப்படலும்.
  8.  நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல்.
  9. உடலில் புள்ளிகள், கொப்பளங்கள் ஏற்படல்.
  10.  ஏதாவது மூட்டுக்களை அசைக்க முடியாதிருத்தல்
  11.  உடலின் எப்பகுதியிலாவது வீக்கங்கள் ஏற்படல்.

மேற்குறிப்பிட்டவை போன்ற அறிகுறிகள் குழந்தைக்கு கடுமையான நோய்த்தாக்கம் உள்ளது என்பதைக் காட்டக் கூடியவை ஆகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடிமருத்துவ சிகிச்சை அவசியமாகும்.

காய்ச்சல் உள்ள குழந்தையை எவ்வாறு பராமரிப்பது.

  1. வைத்தய ஆலோசனைப்படி குழந்தையின் வயதுக்கும் நிறைக்கும் ஏற்றளவில் பரசிடமோல் எனப்படும் காய்ச்சல் நிவாரணி மருந்தை 6 மணித்தியாலத்துக்கு ஒரு தடவை காய்ச்ல் இருந்தால் வெப்பிலையைப் பார்த்துக் கொடுக்கலாம்.
  2.  பரசிடமோல் தவிர்ந்த வேறு ஏதாவது வலி நிவாரணி மருந்துகளைக் கொடுக்க வைத்திய ஆலோசனை தேவை.
  3. காய்ச்சல் உள்ள குழந்தைக்கு வழமையை விட அதிகளவு நீராகாரங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிக உடல் வெப்பம் காரணமாக உடல் வறண்டு போகலாம்.
  4.  வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு போன்ற வேறு அறிகுறிகள் காணப்படின் வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும்.
  5.  உடலின் வெப்பநிலையை குறைப்பதற்காக. தளர்வான உடைகளை அணிவதுடன் ஒரு போதும் போர்த்து மூடக்கூடாது. உடலைப் போர்த்து மூடும் போது உடலின் வெப்பநிலை மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது.
  6. வேறு கடுமையான அறிகுறிகளின்றி மெதுவான காய்ச்சல் உள்ள ஒரு குழந்தைக்கு இரண்டு நாள்களுக்கு மேலும் தொடர்ந்து காய்சலிருப்பின் வைத்திய ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.
  7.  எப்போதும் தொற்றுநோய் ஏற்பட்ட காய்ச்சல் உள்ள குழந்தைகளைப் பராமரிக்கும் போது நியம பாதுகாப்பு முறைகளை (குறிப்பாக நன்றாக கைகளை கழுவுதல்) பின்பற்ற வேண்டும்.

மேற்குறிப்பட்ட பந்திகளிலிருந்து குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய காய்ச்சல் எவ்வளவுக்கு முக்கியமான நோய்களின் அறிகுறி என்பதை தெரிந்து கொள்வதுடன் அதற்கான பராமரிப்பு பற்றியும் அறியலாம். மேலும் ஒரு குழந்தைக்கு கூடிய நாள்களுக்கு விட்டு விட்டு காய்ச்சல் ஏற்படின் ஏதாவது பாரதூரமான வியாதிகள் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும் என்பதால் தகுந்த வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.

மருத்துவர். ந. ஸ்ரீ.சரவணபவானந்தன்.
குழந்தை நல வைத்திய நிபுணர்.
யாழ். போதனா வைத்தியசாலை.

 

மேலும் கட்டுரைகளுக்கு…

Related Posts