‘குளங்களின் நீர் பற்றாக்குறை தொடர்பாக விவசாய அமைச்சருடனும் மத்திய அமைச்சுக்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். இக்குளங்களைப் புனரமைத்தல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களை ஒன்றாக இணைத்து நீர் மட்டங்களைக் கூட்டுதல், அதன் மூலம் இரண்டு போக பயிர்ச் செய்கைகளுக்கான நீரைத் தேக்கி வைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாராய்ச்சிகள் முடிவடைந்ததும் உங்கள் குளங்கள் புனரமைப்புச் செய்யப்படும். அப்போது நீங்களும் இரணைமடுக்குளத்தின் கீழ் விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கு ஒப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஸ்கந்தபுரம் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 8 கடைகளைக் கொண்டகடைத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘விவசாயச் செய்கையில் ஈடுபடும் நீங்கள் வெறுமனே நெற்பயிர்ச்செய்கையுடன் மட்டுமே நின்று விடாது உப உணவுப் பயிர்கள், மரக்கறி வகைகள், சிறு தானியங்கள் மற்றும் வாழைப் பயிர்ச்செய்கை ஆகிய விவசாய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
வருமானம் ஈட்டக் கூடிய பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் வருமானங்களை உயர்த்திக்கொள்ள முடியும்’ என்றார். ‘தம்புள்ளையில் காணப்படுவது போன்று ஒரு விவசாயப் பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையம் ஒன்று வவுனியாப் பகுதியில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான மத்;திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுவிடின் உங்கள் விவசாய விற்பனைப் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பு கிடைக்கப்பெறும் என்பதை மனதில் இருத்தி இப்போதிருந்தே உங்கள் விவசாய முயற்சிகளில் ஈடுபட முன்வர வேண்டும்.
உங்கள் பகுதிகள் முன்பு போல் அல்லாது வளர்ச்சியடைந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. ஒரு கூட்டுறவுச் சங்கக் கடையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பிரதேசம் இன்று பல கடைகள், கடைத் தொகுதிகள் என விரிவடைந்துள்ளது. கடைகள்தான் ஆங்காங்கே இருக்கும் மக்களை ஒன்று சேர்க்க உதவுகின்றன. தாம் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொண்டு வந்து விற்கவும், வெளியில் இருந்து கொண்டு வரப்படும் நாளாந்தந் தேவைக்கான பொருட்களை வாங்கவும் கடைகளே வழிவகுக்கின்றன. இங்கு சந்தையானது நல்ல நிலையில் இயங்கிய போதும் கடைவசதிகள் இல்லாதிருந்ததாலும் தற்காலிகக் கடைகள் அடிப்படை வசதிகளின்றி இயங்கியதாலுமே பிரதேச அபிவிருத்தித் திட்டத்தில் உங்கள் கிராமம் முன்னுரிமைப்படுத்தப்பட்டது. ஒரு கிராமத்தின் வளர்ச்சியானது மெதுவாகவும் ஆனால் ஸ்திரத்தன்மை கொண்டதாகவும் அமைதல் வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியானது நிரந்தரமானதாக அமையும்’ என்றார்.