குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய தினம் சந்தேகநபர்கள் பத்து பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லையெனவும், தம்மை பழிவாங்கும் முயற்சியில் பொலிஸார் வீண்பழி சுமத்தியுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தாங்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறும் அவர்கள் நீதிமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்த அவர்கள், அப்படி இல்லாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 08ம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.